Show all

ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணாசலையில் அலையலையாய்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் போராளிகள்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும், நடுவண் அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர் உணர்வுகளை மடை மாற்றும் விதமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்- அல்லது தள்ளி வைக்கலாம்- அல்லது தமிழகம் தவிர்த்து வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்கிற எந்தக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் கிரிகெட் நடத்துவது என்கிற முடிவு. காவிரி மோலாண்மை வாரியமும் இல்லை, அதற்காக போராடும் தமிழர் உணர்வுகளுக்கும் மரியாதை இல்லை. 

சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலக பிரமுகர்கள தமிழ் கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராடினர். 

தமிழக திரைப்பட இயக்குநர்கள் தமிழகத்திற்கான தனிக்கொடியுடன் போராட அழைப்பு விடுத்திருந்தனர். கட்சி சார்பற்று போராட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய பாரதிராஜா தலைமையிலான இயக்குநர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கொடி நீல வண்ண பின்னணி கொண்டது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளில் உள்ள வில்அம்பு, புலி, மீன் ஆகியவை இக்கொடியின் நடுநாயகமாக இடம் பெற்றுள்ளன. சிவப்பு வண்ணம் ஒன்று குறுக்கே செல்வதை போல அமைந்தது இந்த கொடி. 

போராட்டம் பிற்பகல் மூன்று மணிக்கே தொடங்கி விட்டது. போராட்டக் காரர்கள் அலைஅலையாக சேப்பாக்கம் அரங்கத்தில் குவிந்தார்கள். தன்னாhவலர்கள், நாம் தமிழர்கட்சியினர், மே பதினேழு இயக்கம், திரைதுறை இயக்குநர்கள், தமிழர் வாழ்வுரிமை கட்சியினர், உழவர் பெருமக்கள் என்று ஏராளமானோர் அண்ணாசலையை முழுவதுமாக ஆக்ரமித்தனர். காவல் துறையினரும் ஏராளமானோர் குவிக்கப் பட்டிருந்தனர். 

போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான், பாரதிராஜா, வைரமுத்து, கருணாஸ் கௌதம், அமீர், வெற்றிமாறன், மணியரசன், என்று முன்னனி போராளிகள் தொடர்ந்து கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா சாலையில் போராடியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இத்தனையையும் தாண்டி விளையாட்டை நடத்த முயன்ற அவசரத்தில் விளையாட்டு நடுவரை அழைத்து செல்ல மறந்துவிட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் பூவா தலையா போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு நடுவே எப்படியோ சென்னை கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா வீரர்களை உணவகங்களில் இருந்து பத்திரமாக அரங்கத்திற்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறை.

விளையாட்டுக்கு பலத்த பாதுகாப்பு அளித்த போதும் அரங்கத்திற்குள்ளும் செருப்பு வீசப்பட்டதால் விளையாட்டு நிறுத்தப் பட்டு செருப்பு வீசியவர்களை கைது செய்த பிறகு விளையாட்டு தொடங்கியது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,753.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.