Show all

திருச்செந்தூர் கண்ட வரலாறு காணா கூட்டம்! தொடர் விழாக்கள், விடுமுறைகள் காரணம்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்செந்தூரில் வரலாறு காணாத மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் திண்டாடினர். கிழமையின் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை இருந்தோலே அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு வெளியூர்களிலிருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். 

கலைமகள், மலைமகள், அலைமகள் விழாக்களையொட்டி இந்த ஆண்டு 4 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அமைந்தது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அழைத்துக் கொண்டு ஏராளமனோர் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் தாமிரபரணி நீர்ப்பெருக்கு விழாவும் செவ்வாய்க் கிழமை வரை நடைபெறுவதால் ஆற்றில் நீராட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தீர்த்தக் கட்டங்களுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு பக்தர்கள் திருச்செந்தூருக்கு சாமி பார்வை செய்ய ஆயிரக்கணக்கானோர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடி முருகப் பெருமானைத் தரிசித்தனர். இதனால் வரலாறு காணாத அளவில் இந்த முறை திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டமும், வாகனங்களும் அலைமோதின. இதையொட்டி திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச்சாலை வழியாக தெப்பக்குளம் வந்து அங்ங்கிருந்து பரமன்குறிச்சி சாலை வழியாக பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி வழியாக குலசேகரன்பட்டினத்திற்கு திருப்பி விடப்பட்டன.

இதுபோல் குலசேகரன்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் வழியாக திரும்பி வரும் வாகனங்கள் குலசை, கல்லாமொழி, ஆலந்தலை வழியாக திருப்பி விடப்பட்டன. இருப்பினும் போக்குவரத்து நெருக்கடியை ஒரளவே சமாளிக்க முடிந்ததே தவிர முற்றிலும் தவிர்க்க முடியவில்லை. நேற்று அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்தது. இந்த 4 நாட்களிலும் திருச்செந்தூர்  கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போதும் கோயிலில் சுவாமி பார்வை செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாசலில் வரிசையில் காத்திருந்தனர். வரலாறு காணாத போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சுற்றுலா நகரம் திணறியது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.