Show all

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது. பீடமும் சேதப்படுத்தப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே ‘திருவள்ளுவர் பூங்கா’ உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு திருப்போரூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்க பூங்காவில் பீடம் அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையும் செதுக்கப்பட்டு பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. முறையான அனுமதி கிடைத்தவுடன் அங்கு சிலையை நிறுவ முடிவு செய்து, ஒரு மாதமாக பூங்காவில் திருவள்ளுவர் சிலையை துணியால் சுற்றி மூடிவைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூங்காவில் மூடிவைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலை திடீரென மாயமானது. சிலை வைக்க அமைக்கப்பட்டு இருந்த பீடமும் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. பூங்காவுக்கு நேற்று காலை வந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திருவள்ளுவர் சிலை மாயமாகி இருப்பதையும், பீடம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருவள்ளுவர் சிலையை அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டு இருக்கலாம் என்ற ஐயப்பாட்டில்; சமூக ஆர்வலர்கள் அவரிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். காவல்துறையினரும் சிலையை அகற்றவில்லை என்று கூறிவிட்டனர். எனவே திருவள்ளுவர் சிலை திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளுவர் சிலையை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஒன்றிய செயலாளர் சிவராமன், நகர செயலாளர் லோகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பா.ம.க. ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்தையும், பீடம் உடைக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.