Show all

உணர்ச்சிகரமான தகவல்கள் ஏதும், கமல் அறிவிப்பில் இப்போதைக்கு இல்லை

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:

எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைகள்தான் மக்கள் நீதி மய்யத்திற்கும் இருக்கிறது. தரமான கல்வி, எல்லா தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். நல்ல தலைமை, தரமான கல்வி, தடங்கல் இல்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் சொல்லிச் சொல்லி விளையாடும் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நின்று காட்டுவோம்.

ஊழலை குறைப்பதில் நமக்கும் பங்கு உள்ளது. இதுநாள் வரை வேடிக்கை பார்த்தோம். இனி அதை செய்யக்கூடாது. உங்கள் வாக்கின் மதிப்பு தெரியாமல் விற்று விட்டீர்கள். உங்களின் எல்லா பற்றாக்குறையும் பேராசையால் வந்துள்ளது. நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால், ஆறாயிரம் என்ன, ஆண்டுக்கு 6 லட்சம்கூட கிடைத்திருக்கலாம். 

காவிரியில் தண்ணீர் வாங்கி கொடுக்க முடியுமா என்கிறார்கள். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, என்னால் ரத்தத்தைக் கூட வாங்கி கொடுக்க முடியும். நான் ரத்த தானத்தை சொல்கிறேன். என் பெங்களூர் சகோதரர்கள் தமிழ்நாட்டில் வந்து ரத்ததானம் செய்து இருக்கிறார்கள். அதனால் எதையும் பேசித் தீர்க்க முடியும். 

நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுப்பதை கிண்டல் செய்கிறார்கள். உடனே செய்வதற்கு நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல, சமூக சேவகர்கள். அந்த கிராமங்களில் அனைத்து வசதிகளையும் செய்வோம். தவறுகள் இருந்தால் திருத்துவோம்.

நம் கட்சி கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களைக் குறிக்கும், நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. இவ்வாறு அவர் பேசினார். உணர்ச்சிகரமான தகவல்களோ, தெளிவான திட்ட வரையறைகளோ, கமல் அறிவிப்பில் இப்போதைக்கு எதுவும் இல்லை. ஆசைகளையும், கனவுகளையும் மட்டுமே தற்போதைக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

கட்சியின் பெயரிலோ, கொடியின் வடிவமைப்பிலோ பெரிதாக தமிழ்மக்களைக் கவரும் வகையான ஈர்ப்பு ஏதும் இல்லை.

ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் மக்களை பெரிதாக பாதிக்காது; ஏனென்றால் அது அறிவுவாழ்மானிகளின் செய்தி. 

எந்;த மனிதனும் அடுத்தவன் முதுகின் அழுக்கைதான் பார்ப்பான். சந்தர்ப்ப சூழ்நிலை எல்லோரையும் குற்றவாளியாக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளை நல்லதாக அமைத்து குற்றம் களையாமல், தண்டனை, அறிவுரை என்பனவெல்லாம் வறட்சியானவைகளே. 

ஓட்டுக்கு காசு மக்கள் விரும்பி வாங்குவதில்லை; அது மட்டுமாவது மிச்சமாகட்டும் என்றுதான் வாங்குகிறார்கள். ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள் என்றெல்லாம் மக்களுக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஓட்டுக்கு காசு வாங்க வேண்டியதில்லாத ஆட்சியை நடத்திக் காட்ட வேண்டும். 

மொத்தத்தில் கமல் நிறைய மக்களிடம் கற்றுக் கொண்டுதான் மேலேற முடியும் என்று தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,705 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.