Show all

ஆழிப் பேரலை நினைவேந்தல்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண் முன்னே பறி கொடுத்தவர்களும் மனதளவில் உருக்குலைந்து போனார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், அந்த சோக வடுவை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

சுனாமி தாக்கியதன் நினைவு நாளான நேற்று சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களில் மக்கள் மலரஞ்சலி செலுத்தினர். சென்னையில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினத்தில் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ ஜெயபால், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ் பழனிச்சாமி, மற்றும் பிற அதிகாரிகள் மவுனமாக ஊர்வலம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடலூரில் 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் மவுன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல் அமைச்சர் ரங்கசாமி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரியில் சுனாமி நினைவு தூணில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மணக்குடியில் உள்ள அந்திரீயாஸ் ஆலயத்தில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி கல்லறை தோட்டத்திற்கு சென்றனர். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயத்தில் திருப்பலியை தொடர்ந்து ஊர்வலமாக கல்லறை தோட்டத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

சுனாமி தினத்தையொட்டி ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் சுனாமியில் பலியானவர்கள் சாந்தி அடைய வேண்டி கடலில் பால் ஊற்றி வழிபட்டனர். மீனவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.