Show all

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், வாகனங்கள் மீது கற்களை வீசிஉள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் நேற்று இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் கோவையில் பதற்றம் நிலவி வருகிறது. சசிகுமார் கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்தனர். இன்று அதிகாலை முதல் நகரின் அனைத்து பகுதிகளிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். காலை முதல் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. நகரில் 90 சதவீத கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. மேலும் அரசு, தனியார் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை முதல் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. கிராமப்பகுதிகளுக்கு மட்டும் குறும்பேருந்துகள் உள்பட ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில் சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. துடியலூரில் ஒன்றாக கூடிய தொண்டர்கள், அப்பகுதியில் திறந்து இருந்த கடைகள் மீது கற்களை வீசினர். சாலையில் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர். பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்களை வீசினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனையடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது. உடனடியாக கூடுதல் காவலர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இச்சம்பவத்தினால் அங்கு பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே டிஜிபி டிகே ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டியில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை. சட்டம் ஒழுங்கு 100 சதவிதம் கட்டுக்குள் உள்ளது என்று கூறிஉள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.