Show all

புத்தகப் பையில் ஆயுதக் குவியல்! மிரள வைத்த சென்னை மாணவர்கள்

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால போக்காக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே வழித்தட தல பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு. காவல் துறையினனரும் மாணவர்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்தாலும் அது தொடர்கதையாகி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் நிலையும் உள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது காவல்துறையினரும் கவனமாகவே செயல்படுகின்றனர். மாணவர்கள் பிரச்னை என்பதால் அது பலநேரங்களில் பூதாகரமாக வெடித்ததுண்டு. இன்று காலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கல்லூரி முதல்வர் காளிராஜ், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். பிறகு கல்லூரி நிர்வாகம் ஆயுதங்களோடு வந்திருந்த 6 கல்லூரி மாணவர்களை காவல் துறையிடம் ஒப்படைத்தது. அவர்களின் பெயர் விவரம்: கொளத்தூரைசு; சேர்ந்த வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவர் திணேஷ், குன்றத்தூரை சேர்ந்த வணிகவியல் இரண்டாமாண்டு மாணவர் செல்லமுத்து, சூளைமேடுவை சேர்ந்த கணினி பயன்பாட்டியல் இரண்டாமாண்டு மாணவர் அருண்குமார், அம்பத்தூரை சேர்ந்த வணிகவியல் முதலாமாண்டு மாணவர் கார்த்திகேயன், கொடுங்கையூரை சேர்ந்த கணினி பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவர் மணிகண்டன், கொரட்டூரை சேர்ந்த வணிகவியல் முதலாமாண்டு மாணவர் எல்.மணிகண்டன் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினனர் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஈடுபட மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்தது தெரியவந்தது. இதனிடையே, இந்த விவகாரத்தில், கல்லூரியில் இருந்து 70 மாணவர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.