Show all

எலிகளை அறுவடை செய்யாமல் கூரையைக் கொளுத்தும் முயற்சியா! 8,000 சத்துணவு மையங்களை மூட தமிழகஅரசு முடிவாம்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராசர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் நீட்டித்தார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. 

தமிழ்நாட்டில் தற்போது 43,200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஏழை மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் வருகை குறைவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 1000 குழந்தைகள் வரை பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையடுத்து மாணவர்கள் குறைவாக வரும் மையங்கள் பற்றி அரசு கணக்கெடுத்து வருகிறது. இதில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் 8,000 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

இந்த மையங்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அருகில் உள்ள மையங்களுக்கு மாற்றப்படுகிறது. அந்த மையங்களில் இருந்து உணவு தயாரித்து மாணவர்கள் குறைவாக உள்ள மையங்களுக்கு தேவைக்கேற்ப அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்க செயலாளர் ஆர்.நூர்ஜகான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் 10,000 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது அரசு எடுத்துள்ள முடிவால் சத்துணவு திட்டம் மேலும் பலவீனம் அடையும் என்றார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவதுதான் அனைத்திற்குமான பிரச்சனை. அரசு பள்ளியின் ஆசிரியர்கள் சம்பளத்திற்கு வேலை செய்தால் எல்லாம் சரியாகி விடும். குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் மட்டுமல்லாமல், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே கூட முன்வருவதில்லை என்பதுதான் வேடிக்கை.

அரசு பள்ளிகள், இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நல்ல வரவேற்பில்தான் இருந்தது. தற்போதுதாம் படிப்படியாகத் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆசிரியர்களை வேலை வாங்கினால் எல்லாம் சாத்தியமாகும். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளுக்கு மரியாதைக் கூட்ட முடியும். 

பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளுக்காக மட்டும் அரசு கல்லூரிகள் பல்கலைக் கழகங்களை நாடும் பெற்றோர்கள், மழலையர் பள்ளிகளுக்கும் அரசு பள்ளியை நாடும்படி  செய்ய, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் வேலை வாங்க வேண்டும் ; வாங்கவும் முடியும் ; வெற்றி பெறவும் முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.