Show all

தமிழகத்தின் பழமைகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புப் படை தமிழக அரசு உருவாக்க வேண்டும்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மீனாட்சி அம்மன் கோயிலில் செல்பேசி பயன்படுத்த தடை விதித்த உயர்அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் நடுவண் படை பாதுகாப்பு கேட்க இதுவே சரியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை, அண்ணாநகரை சேர்ந்த வழக்;கறிஞர் முத்துக்குமார், உயர்அறங்கூற்று மன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனுவில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு காரணங்கள் கருதி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கனவே நடுவண் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் அதிகளவு கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும், பழமையான சின்னத்தை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு அறங்கூற்றுவர்கள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் அணியமாகி, முந்தாநாள் கூட படக்கருவி கண்காணிப்பு அறையில் தீவிபத்து ஏற்பட்டது. கோயிலில் இன்னும் முறையான பாதுகாப்பு இல்லை. தகவல்உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவல்படி குங்குமம் மற்றும் பூசைப்பொருட்களே விற்க வேண்டும். ஆனால், விதிகளை மீறி மின், மற்றும் நெகிழிப் பொருட்கள் விற்கப்படுகின்றன என்றார்.

அப்போது அறங்கூற்றுவர்கள், ‘கோயிலில் என்ன பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர். அதற்கு கோயில் தரப்பில், ‘சுழற்சி முறையில் காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அறங்கூற்றுவர்கள், ‘ஏன் தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை கேட்கவில்லை. கோயிலின் உறுதித்தன்மை எந்தளவுக்கு உள்ளது என்று கேட்டனர். இந்தியத் தொழல் நுட்பக் கழக வல்லுநர் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வழக்கறிஞர் ஒருவர், ‘கோயிலை சுற்றிலும் விதிகளை மீறி ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. 14 கோபுரங்களையும் மறைக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் எல்லா கோயில்களிலும் இந்தநிலைதான் உள்ளது என்றார். இதற்கு, அறங்கூற்றுவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: 400 ஆண்டு பழமையான வீரவசந்தராயர் மண்டபத்தின் கூரை தீவிபத்தால் இடிந்துள்ளது. கோயிலின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே நடுவண் உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து நடந்தபோது கோயிலில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்துள்ளது. தீ தடுப்பு பணிகள் குறித்து கோயில் ஊழியர்களுக்கு போதிய பயிற்சியும், விழிப்புணர்வும் இல்லை. போதுமான தீ தடுப்பு கருவிகள் கோயிலுக்குள் இருக்க வேண்டும். நெகிழி மற்றும் தீப்பற்றும் பொருட்களின் பயன்பாடு கோயிலுக்குள் இருக்க கூடாது. ஐஎஸ்ஐ தரம் கொண்ட காப்புக்கம்பிகள் மூலம் மின் இணைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும்.

கோயில் முழுவதும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோயிலின் சுற்றுச்சுவரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில், 9 மீட்டர் உயரத்துக்கு மேல் விதிகளை மீறி கட்டிடங்கள் இருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பல்வேறு கோயில் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் உள்ளதைபோல, மீனாட்சியம்மன் கோயிலிலும் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் தவிர்த்து செல்பேசி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. பக்தர்களின் செல்பேசியை வைத்திருக்க தேவையான மையம் ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.

நடுவண் படை பாதுகாப்பு கேட்க இதுவே சரியான நேரம் என்பதால், தேவை கருதி தமிழக அரசு நடுவண் அரசை அணுகலாம். உயர்தொழில் நுட்பம் கொண்ட கண்காணிப்புப் படக்கருவிகளை பயன்படுத்த வேண்டும். அனைத்து கோயில்களையும் பாதுகாக்க தொல்லியல் துறையினரைக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கையை 28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (12.03.2018) அரசு தரப்பில் பதிகை செய்ய வேண்டும். இவ்வாறு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துசம்பவத்தை தொடர்ந்து கோயிலுக்குள் இருந்த, 115 கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென, உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை நிர்வாகிகள் அறிக்கை வழங்கினர்.

முதல்கட்டமாக வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள 22 கடைகளின் பொருட்களை, நேற்று பகல் 12 மணிக்குள் காலி செய்து தர வேண்டுமென கடை உரிமையாளர்களுக்கு உயர் அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நேற்று காலை, கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கடைகளை காலி செய்து கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். மீதமுள்ள கடைகளுக்கும் அறிக்கை வழங்கப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து கடைக்காரர்கள் காலி செய்ய உள்ளனர்.

நடுவண் தொழிற்சாலை பாதுகாப்புப் படை இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய நடுவண் காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முதன்மையான தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும்.

அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், பழமையான சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி 2,800 படைவீரர்களுடன் நடுவண்; தொழிற்சாலை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இதன் அப்போதைய பணி நடுவண் அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதாகும். பின்னர், இயற்றப்பட்ட மற்றொரு சட்டத்தின் படி, ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டது. பின்னர், இதன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு, நடுவண் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத்தொடங்கியது. இதன் மூலம் எல்லா விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொடர்வண்டி நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன.

இந்திய தலைநகருக்கு அச்சுறுத்தல் அதிகமானதையடுத்து, டெல்லி மாநகரக் காவல், இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கியது. தற்போது இப்படையில் ஒரு லட்சத்தி இருபதாயிரம் படைவீரர்கள் உள்ளனர்.

உலகில் உள்ள தொழிற்துறை பாதுகாப்புப் படைகளில் இப்படையே மிகப்பெரிய படையாகும். தற்போதைக்கு 300 தொழில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருகிறது. அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், இராணுவ அமைவிடங்கள், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பாலைகள், கனரக ஆலைகள், எஃகு உலைகள், அணைக்கட்டுகள், உரக்கிடங்குகள், விமான நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், நாணய அச்சு ஆலைகள், சில பன்னாட்டு இந்திய தனியார் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது.

இவ்வமைப்பு பாதுகாப்பு மட்டுமன்றி தனியார் அமைப்புகளுக்கு பாதுகாப்பு தொடர்பான அலோசனைகளும் அளித்துவருகிறது. இதன் ஆலோசனை மையங்கள் நாடுமுழுவதும் உள்ளன. தேர்தல் பணிகளின் போதும் இப்படை பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவிலேயே பழமையான கோயில்களும் விலையுயர்ந்த பொருள்களும் மிகுந்துள்ள தமிழ் நாட்டில், நடுவண் தொழிற்சாலை பாதுகாப்புப் படை போன்றதொரு கட்டுமானத்தை தமிழக அரசு உடனடியாக உருவாக்குவது தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான காலத்தின் கட்டாயமாகும்.

உலகத்தையே வௌ;ளையனுக்கு முன் கட்டியாண்ட தமிழனுக்கு தன் மண்ணின் பழமைகளைக் காக்க யாரிடமாவது கையேந்த வேண்டிய தேவையெழக் கூடுமா என்ன!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,694

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.