Show all

மாலத்தீவு விவகாரத்தில், இந்த பூனையும் பாலைக் குடிக்குமா என்ற நிலைப்பாட்டில் சீனா

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழகத்திலிருந்து 1065 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாடு மாலத்தீவு.

தமிழில் மாலைத்தீவுகள் என்று அழைக்கப் பட்டு சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது.

பின்னர் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் போர்த்துக்கேயரிடமும், கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. தமிழ்தொடர்ஆண்டு-5066 ல் (1965) மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. தமிழ்தொடர்ஆண்டு-5069 ல் (1968) சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது.

அங்கு அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அவர் எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேரை சிறையில் அடைத்து உள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த வியாழக் கிழமை உச்ச அறங்கூற்று மன்றம் ‘எதிர்க்கட்சி தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்கவில்லை. மாறாக நாட்டில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். மேலும் உச்ச அறங்கூற்று மன்றத் தலைமை அறங்கூற்றுவர் அப்துல்லா சயீத், அறங்கூற்றுவர் அலி ஹமீத் இன்னும் சில முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்தார். இதனால் அந்நாட்டில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இந்தியா அந்நாட்டில் நடைபெறும் உள் விவகாரங்களில் தலையிடாமல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. எனினும், அதிபர் யாமீன் சட்டவிதிகளின்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் இரு நாட்டுக்கு இடையே மற்றொரு மோதல் தளமாக உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

டோக்காலாம் எல்லைப் பிரச்னை, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இந்திய சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சீனாவின் மேற்கண்ட நிலைப்பாடு முதன்மை பெற்றுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,694

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.