Show all

தமிழக அரசு- ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரைக் கிளை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு! பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,

1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 

2.அதிலே அதிரடி. 

3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள் இருக்கும்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொது வெளியில் வெளியிட்ட தமிழக அரசு மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உயர்அறங்கூற்றமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி காவல் துறையிடம் புகார் அளித்திருந்த நிலையில், இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றம் செய்வதாக தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்த அரசாணையில் மாணவியின் பெயர், மாணவி பயிலும் கல்லூரியின் பெயர், மாணவியின் சகோதரரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. 

முன்னதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வழக்குத் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மட்டுமே குற்றம் செய்துள்ளனர். அரசியல் வாரிசுகளுக்கு 100 விழுக்காடு தலையீடு கிடையாது என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்யப்பட்டிருந்த பொதுநல மனு ஒன்றில், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு அமலில் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையின் முதல் கட்டத்திலேயே நான்கு பேர் மட்டும் தான் குற்றம் செய்துள்ளனர். வேறு நபர்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறிய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதற்கு அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.