Show all

மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை! தமிழக அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்குள்; கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கும்படி கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,543 அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் செல்பேசி  பயன்படுத்தக் கூடாது என்று அந்தந்த கல்லூரி நிர்வாகம் மூலம் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு 90 விழுக்காடு கல்லூரிகளில் பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்பேசி எடுத்து வருவதும், பயன்படுத்துவதும் நடந்துவருகிறது.

இதனால், கல்லூரிகளில் தேவையில்லாத பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயக்கும் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை செய்யுமாறு உயர்க்கல்வி செயலாளர் (பொறுப்பு) கூறியுள்ளார்.

எனவே அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்களும் தங்கள் மண்டல கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.