Show all

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 168 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டுகளை இந்தியா தோல்வியுற்ற நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவான், ரிஷாப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். 

முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. ஆனால், ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரஹானே சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியாக ரஹானே 81 ரன்களிலும், கோலி 97 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பந்த். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து, டெஸ்ட் போட்டியில் தான் அடிக்கும் முதல் ரன்னையே சிக்ஸராக அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் 11 வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்நாள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்ந்திருந்தது. மழை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இறுதியாக இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரஷீத் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

அதை தொடர்ந்து தனது முதன் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே குவித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக குக் 29 ரன்களும், கடைசி கட்டத்தில் பட்லர் 39 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் பாண்டயா 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி  ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 168 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.