Show all

மக்களை வேதகாலத்திற்கே அழைத்துச் செல்லும் வகையான ஆளுநர் ரவியின் பரபரப்பு பேச்சு! 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி'

'ஏகம் 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி' என்ற முழக்கத்தோடான, தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை வேதகால ரிஷிகள் உலாவந்த காந்தார மண்ணில் இருக்கிறோமா என்று நம்மைக் கிள்ளிப்பார்த்து கொள்ளும் வகைக்கு பரபரப்பில் ஆழ்த்தியது.

29,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐயப்ப துதிப்பாடலான ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழசை சவுந்தர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை வேதகால ரிஷிகள் உலாவந்த காந்தார மண்ணில் இருக்கிறோமா என்று நம்மைக் கிள்ளிப்பார்த்து கொள்ளும் வகைக்கு பரபரப்பில் ஆழ்த்தியது.

ஆளுநர் ரவி நிகழ்த்திய அந்த சத்சங்கம்:- ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். 

அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதையே நமது மார்க்கம் கூறுகிறது. மற்ற நாடுகளைப் போல சேனைவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவானது. 

இந்தியாவில் சேனைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது பாரதம்.

மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது கட்டாயமாகிறது. இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதை தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. தர்மம் என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. மதம் அனைவரையும் உள்ளடக்கியது. கிமு 2 ம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவையே.

இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தலைமை ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும்

சோமநாதர் கோயில் சொத்துக்களை அழித்து காந்தகார் பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால் அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப் பட்டன. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமையை.

சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம் செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என்பதையே சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார். ஒரு மரம் என்றால் அதில் எண்ணற்ற இலைகள் உள்ளது. அந்த இலைகளுக்கும் மரத்திலிருந்து சத்துக்கள் செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்திய அரசியலமைப்பின் சாராம்சமாக உள்ளது. 

இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போது நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. தொடர்ந்து 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி' என நமக்குப் பொருள் புரியாத, பார்ப்பனியர்களுக்கு மட்டுமே விளங்குகிற அந்த வடமொழி முழக்கத்தை முழங்கிப் பேச்சை முடித்தார் ஆளுநர் ரவி.  ஆளுநர் பேச்சின் அந்த வடமொழி முழக்கத்திற்கு, ஏகம் ஸத் என்றால் பரம்பொருள் ஒன்று என்று பொருள். விப்ரா பஹூதா வதந்தி என்றால் அறிஞர்கள் பலவிதமாக கூறுகின்றனர் என்பது பொருள். என்று பொருள் தெரிவித்து, ஓரிருவர் தங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மகிழ்ந்தார்கள். 

இதுவரை ரவி பேசியது:- இப்படி ஓரிருவர் தங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மகிழும் வகையான ஆதிக்கத்திற்கானது என்பதும், அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதையே அவர்கள் மார்க்கம் கூறுவதாக இரவி சொன்ன செய்தி, அவர்களுக்கு அடிமையாக மற்ற மக்கள் அனைவரும் வாழ்வதே என்பதை ஒரு நூற்றாண்டாக ஈவேரா அவர்கள் இந்த மண்ணில் முழங்கி வந்த செய்தியை எளிதாக நாம் புரிந்து கொள்ளும் வகைக்கானதாக அமைந்து விட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,277.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.