Show all

போக்குவரத்துத் துறை அதிகாரி அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்! 24அரசு அலுவலகங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் நிறைய பணம் பறிமுதல் செய்யப்பட்டதாம்.

போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, வேலூர், தேனி, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 24 அரசு அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் ஏதேதோ பணம் பறிமுதல் செய்யப்பட்டதாம்.

கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்யும் போது, பாபு என்கிற போக்குவரத்துத் துறை அதிகாரி அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார். 

இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள். இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள் என்று எழுதினான் ஒரு கவிஞன். பாவம் இந்த அதிகாரி தன்னை விட்டு விட உயிரைக் கொடுத்திருக்கிறார்.

அனுமதிகள் கடுமையாக்கப் படும் போது, அனுமதி தருகிற அமைப்பு அதிகார மையம் ஆகிறது. அதிகார மையம் காசு வாங்கிக் கொண்டு, மிகச் சிலருக்கு அனுமதிகளை எளிமையாக்குவதுதான் இலஞ்சம். 

இலஞ்சத்தை அப்புறப் படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி எல்லா அனுமதிகளையும் எளிமையாக்குவதுதான். எல்லோரும் அறிந்த இலஞ்சத்தை ஆய்வு செய்து பார்ப்போமே! மின் இணைப்பு வாங்குவதற்கும், குடிநீர் இணைப்பு வாங்குவதற்கும் இலஞ்சம் கொடுத்த அனுபவம் சொந்த வீடு வைத்திருக்கிற அனைவருக்கும் இருக்கும்.  

இந்த இரண்டில் இலஞ்சம் ஏன் வருகிறது. மின் பற்றாக்குறை, குடிநீர்ப் பற்றாக்குறை. இந்த இரண்டிலும் தன்னிறைவு அடைந்தால், அந்த அனுமதி மையத்தில் இருப்பவர்கள் இந்த இணைப்புகளை தேடித் தேடிக் கொடுக்க வேண்டிய பணியாளர்களாகவே இருப்பார்கள். மாறாக பற்றக்குறையான ஒன்றை நிருவாகப் படுத்துகிறவர் அதிகாரி ஆகி விடுகிறார். அவர் இலஞ்சத்தை நிர்பந்திக்க  முடிகிறது. 

அந்த இடங்களில் இலஞ்சத்;தை ஒழிப்பதற்கு, பற்றாக் குறையை,  தன்னிறைவு ஆக்க முயலாமல், அந்த அதிகாரிகளுக்கு மேல், இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கி இலஞ்சத்தை வலிமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறோம். இலஞ்சத்தை ஒழிக்க மேலும் மேலும் அதிகார மையங்கள்! என்று நாம் மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறோம். கட்சிகள், ஊடகங்கள், அறிஞர்கள் எல்லாம் அதையே முன் வைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம்: சம்பளத்திற்கு கேடாக, அதிகார மையங்களை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போவது தவறு என்கிற பாடந்தான் இந்த நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர்களின் மீதே இலஞ்சப் புகார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.