Show all

மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்

மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வாடிப்பட்டி, விழுப்புரம், புதுக்கோட்டையில் தொடர் மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

     அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. வாடிப்பட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மறியலில் கலந்து கொண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார்கள்.

     சல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

     இதனையடுத்து வாடிப்பட்டியில், சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

     கைது செய்யப்பட்டவர்களை நேரில் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பேசும் போது, மாணவர்களுக்கு காவல்துறையினர் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. இன்று நாங்கள் சென்று பார்த்த போது உணவு உண்ண கொடுத்தாலும் மாணவர்கள் வாங்க மறுக்கின்றனர். அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

     இதேப் போன்று அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புதுக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரி வன்னியன் விடுதியில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

     அலங்காநல்லூர் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும என்ற அதே கோரிக்கையை முன் வைத்து விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதவிர, விழுப்புரத்தில் தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் சல்லிக்கட்டு நடத்தினார்கள். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

     அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி திருச்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒன்று கூடிய கல்லூரி மாணவர்கள் மவுன போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.