Show all

மெரினாவில் மின்சாரம் துண்டிப்பு; செல்பேசி விளக்கொளியில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள்!

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடத்தி வரும் போராட்டம் பல மணி நேரமாக நீடித்து வருகிறது.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது செல்பேசி விளக்கொளியில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதலே அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாடுபிடி வீரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காலை, சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான இளைஞர்கள், பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

     மேலும், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோரை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சேலம், கோவை, விருதுநகர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.

     இதனிடையே சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டோரை விடுவிக்ககோரி மாணவர்கள், இளைஞர்கள் காலை முதலே போராடி வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் ஒருங்கிணைந்த இவர்களின் போராட்டம் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     போராட்டத்தை கைவிடக்கோரி காவல்துறையினர் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் மெரீனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது செல்பேசி விளக்கொளியில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.