Show all

பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார்

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள பேரறிவாளனை சக ஆயுள் தண்டனைக் கைதி ராஜேஷ் கண்ணா(அகவை41) என்பவர் இரும்பு கம்பியால் நேற்று காலை திடீரென தாக்கியுள்ளார். பலத்த காய மடைந்த பேரறிவாளன், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உயர் பாதுகாப்பு தொகுதி 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 1-ம் எண் பிரிவில் ராஜேஷ்கண்ணா, முருகன், சாந்தன், கூள நாகராஜன், யுவராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். இரண்டாம் எண் பிரிவில் முருகன், பேரறிவாளன் உள்ளனர். மூன்றாம் எண் பிரிவில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்பு டையவர்கள் உள்ளனர். இவர்களில், கூள நாகராஜன், ராஜேஷ் கண்ணா ஆகியோர் மீது புகார்கள் காரணமாக உயர் பாதுகாப்பு தொகுதியில் இருந்து சாதாரண கைதிகள் அடைக்கப்படும் 6-வது தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்போவதாக 3 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. ராஜேஷ்கண்ணா இரண்டாம் எண் பிரிவுக்குச் சென்றுள்ளார். முருகன் அவரது அறையில் தியானத்தில் இருந்தார். அவரது அறைக் கதவை வெளிப்பக்கமாக ராஜேஷ்கண்ணா தாழிட்டுள்ளார். பின்னர், தூக்கத்தில் இருந்த பேரறிவாளனை எழுப்பினார். தன்னை 6-ம் தொகுதிக்கு மாற்று வதற்கு நீதான் காரணம் என சிறைக் காவலர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதை மறுத்த பேரறிவாளளை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது அலறல் கேட்டு பக்கத்து அறையில் தியானத்தில் இருந்த முருகன் கூச்சலிட்டுள்ளார். உடனே சிறைக் காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ், ஓடிவந்து பேரறிவாளனை மீட்டார். அந்த அறையிலேயே ராஜேஷ் கண்ணாவை பூட்டிவிட்டு, முருகனின் அறையைத் திறந்துவிட்டுள்ளார். ராஜேஷ்கண்ணா மதுரையைச் சேர்ந்தவர். சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆயுள் தண்டனை பெற்ற அவர் 13 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளார்’’ என்றனர். 6-ம் தொகுதியில் 2 பெரிய அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 50 பேர் வரை தங்கலாம். பொது கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டும். இதுநாள் வரை தனி அறையில் இருந்ததால் மற்ற கைதிகளுடன் இருக்க ராஜேஷ்கண்ணா விரும்பவில்லை. இதனால், அதற்கு காரணம் பேரறிவாளன் என கருதி, தாக்கியுள்ளார். வேலூர் மாவட்ட மருத்துவக் கண்காணிப்பாளர் மணிமேகலை தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் வேலூர் சிறைக்கு விரைந்து, பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரித்தனர். தகவல் அறிந்ததும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி அன்புமணி, மாமா ராஜா ஆகியோர் பேரறிவாளனைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் கண்ணீருடன் அற்புதம்மாள் கூறும்போது, ‘‘இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த சிறைவாசிகளும் வருத்தத்தில் உள்ளனர். உண்மை நிலையைக் கண்டறிய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பேரறிவாளன் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிவாளன் மீதான தாக்குதல் தொடர்பாக கூடுதல் சிறைக்காவலர் ஜெயசீலன் புகாரின் பேரில், பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயர் பாதுகாப்பு தொகுதிக்கு அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் இருந்த இரண்டரை அடி நீள இரும்பு கம்பியை ராஜேஷ்கண்ணா சில நாட்களுக்கு முன்பு மண்ணில் பதுக்கி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.