Show all

சகோதரிமகள் செவ்வை திருமணத்திற்காக! இரண்டாவது முறையாக பேரறிவாளன் சிறைவிடுப்பில்

இன்று நடைபெற்ற சகோதரி மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதமன் திருமணத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக சிறைவிடுப்பில் வந்த பேரறிவாளன்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு பின் சிறைவிடுப்பில், தமிழக அரசின் உத்தரவின்படி வெளியே வந்து திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

பேரறிவாளன் தனது சிறைவிடுப்பு மனுவில், தந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும், தனது சகோதரி அன்புமணி ராசாவின் மகள் திருமணத்தில் கலந்துக்கொள்ளவும் அனுமதி கேட்டிருந்தபடி, அவருக்கு அதற்கான அனுமதி தரப்பட்டு இருந்தது. 

கிருஷ்ணகிரியில் உள்ள சகோதரி மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர் ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதமன் ஆகிய இருவருக்கும், கிருஷ்ணகிரி அருகே தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு பேரறிவாளன் நேற்று அழைத்து செல்லப்பட்டார். இன்று காலை 08.00 மணிக்கு மீண்டும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பினார் பேரறிவாளன். 

பேரறிவாளன் சிறையில் இருக்கிறார் இருபத்தெட்டு ஆண்டுகளாக. எப்போது இவருக்கு விடுதலை? உச்சஅறங்கூற்றுமன்றம் பேரறிவாளனோடு மற்ற அறுவரையும், தமிழக அரசு விடுவித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் விடுதலை இல்லை. 

காரணம் என்ன? குற்றச்சாட்டு: ‘இராஜிவ் காந்தி கொலையில் தொடர்பு பேரறிவாளனுக்கு’ என்பதாக மட்டுமாக இல்லை. ‘இந்திய இறையாண்மை மீதான துரோகத்தில் தொடர்பு ஒரு தமிழனுக்கு’ என்கிற மௌனஇசையாகவும் குற்றச்சாட்டு சேர்த்து இசைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில், காங்கிரசிலோ, பாஜகவிலோ இருக்கிற, அந்தக் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிற, தமிழர்களுக்கு அந்த மௌன இசையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

அப்படியானால் பேரறிவாளன் விடுதலை? தமிழக மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும், இந்த இரண்டு கட்சிகளுக்கு ஆதரவளிக்கிற தமிழக கட்சிகளுக்கும் விடை கொடுப்பதில் மட்டுமே சாத்தியமா.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை அடுத்த ஆண்டே தூக்கில் இட்டு விட்டார்கள். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற பியாந்சிங் சத்வத்சிங் இருவரும் ஐந்து ஆண்டுகளில் தூக்கில் இடப்பட்டார்கள். அப்புறம் ஏன் இராஜிவ் கொலையாளிக்கு இந்தக் கருணை என்று பொதுவானவர்கள் கேட்கிறார்கள். 

இராஜிவ் கொலைக்குற்றவாளிகள் செத்துவிட்டார்கள். மௌனஇசையைத் தொடர்ந்து மீட்டிக் கொண்டிருப்பதற்காக,  இந்த எழுவர் குற்றவாளிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி விடுவிப்பது? இவர்களுக்கு எப்படி மரணதண்டனை கொடுக்க முடியும்? விக்கிரமாதித்த தமிழர்களுக்கு, விடுவிக்கமுடியாத விடுகதையைப் புதிராக்கியிருக்கும் வடஇந்திய வேதாள அரசியல்வாதிகள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,346.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.