Show all

முல்லைப் பெரியாறு அணை கட்டி நீர்வளம் காத்த பென்னிகுவிக் பேத்தியின் தமிழக வரவேற்பில் வைகோ புகழாரம்

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பென்னி குவிக்கின் பேத்தி சூசன்ஃபெரோவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த சூசன்ஃபெரோ தமிழகம் வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

பல லட்சம் ரூபாய் சொத்துக்களை விற்று லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்க அணை கட்டியவர் பென்னிகுவிக். வறட்சி தாண்டவமாடிய மாவட்டங்களில் முப்போகம் விளையவைத்து பஞ்சம் தீர்த்த பென்னி குவிக் தென் மாவட்ட மக்களின் கடவுள் என்றால் மிகையாகாது.

ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு இன்றைக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது. சோதனைகளை சாதனைகாளாக்கி தன் சொத்தை விற்று பெருமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார் பென்னி குவிக். அரும்பாடு பட்டு அவர் கட்டிய இந்த அணை தான் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின், பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது.

எங்கோ பிறந்து, இங்கு வந்து இத்தகைய சமூக அக்கறையுடன், தொலைநோக்குடன் வியத்தகு சாதனை படைத்தவர் பென்னிகுவிக். அவரது கல்லறை இன்றைக்கும் தேனி மாவட்டத்தில் உள்ளது.

தனது தாத்தாவின் கல்லறையை பார்ப்பதற்காகவும், தாத்தா கட்டிய அணையை பார்வையிடவும் தமிழகம் வந்துள்ளார் பென்னிகுவிக் பேத்தி சூசன்ஃபெரோ. மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்று பேசிய வைகோ, பென்னிகுவிக் பெருமைகளை எடுத்துக்கூறினார்.

தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களை காத்தவர் பென்னி குவிக் என்று கூறிய வைகோ, முல்லைப்பெரியாறு அணை கட்டி குடிநீர் பஞ்சம் தீர்த்தவர் என்று கூறினார். பென்னி குவிக் புகழ் ஓங்குக என்று முழக்கமிட்டார் வைகோ. தை பொங்கல் திருநாளில் தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட சூசன் ஃபெரோ, தமிழகம் வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,666

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.