Show all

நாம் பொங்க வேண்டியது அரிசிப் பொங்கல் அல்ல; கூலித்தளத்தில் இருந்து விடுபடுவதற்கான மனமாற்றப் பொங்கல்.

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் தொடர் ஆண்டு அமைத்துக் கொண்டதற்குப் பின், இன்று வருவது 5119வது பொங்கல் திருவிழா.

தமிழர் 5119 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் முதல் வணிகன் தமிழன். உலகில் முதன் முதலாக கடல் கடந்து வணிகம் புரிந்தவன் தமிழன். உலகில் முதன் முதலாக அணை கட்டி உழவு செய்தவன் தமிழன்.

சமுதாயம் விழாமல் இருப்பதற்கு உழவும் வணிகமும், உழவும் வணிகமும் விழாமல் இருப்பதற்கு விழா என்று விழா கொண்டாடியவன் தமிழன்.

ஓவ்வொரு தமிழனும் சுயதொழில் முனைவோனாக இருந்ததால், வணிகத் தொடர்பும், வணிகத்திற்காக சமூகத் தொடர்பும், சமூகத் தொடர்பு கருவியாக வளமையான மொழியும், ஒத்துழைப்பிற்காக குடும்பமாக வாழவேண்டும் என்கிற பாங்கும், ஊரும் நாடும் அரசும் கல்வியும் இவற்றில் எல்லாம் அவன் விழாமல் இருப்பதற்கு விழாக்கள் தேவையாய் இருந்தன.

இன்றைக்கு முதலாவதாக மொழி, நிலம், தொழில், கல்வி, கலை, கோயில், அரசு என்று உடைமைகளை அன்னியர்களிடம் ஒப்படைத்து விட்டு உடல் உழைப்புக் கூலிகளாகவும், நிருவாகக் கூலிகளாகவும் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு நாம் கொண்டாடுகிற பொங்கல் வெறுமனே ஒரு சடங்குதானே யொழிய நம் தமிழ் முன்னோர் வகுத்த நோக்கத்திற்கானதன்று.

இன்றைக்கு நாம் கொண்டாடுகிற அனைத்து விழாக்களும் கூட அன்னிய சமூகம் விழாமல் இருப்பதற்கான வணிகத்திற்கே பயன்பாடாய் அமைந்து விடுகிறது.

சுயதொழல் முனைந்த நம் தமிழ் முன்னோர்

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்தில் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று ‘பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல் என இது தமிழர் பண்பாடாய் மலர்ந்திருந்தது.

நிருவாக கூலியாகவும், உடல் உழைப்புக் கூலியாகவும் அயலவரைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற தமிழர் சுயதொழில் முனைவோராய் ஒன்றிரண்டு தமிழர்களை அடையாளம் கண்டு அவர்கள் உற்பத்திகளை வணிகப் படுத்த பொங்கல் கொண்டாடுவோம். நாமும் பகுதி நேரமாகவேணும் சுயதொழில் முனைவோராக இயங்க களம் அமைப்போம். என இந்தப் பொங்கல் நாளில் உறுதி மொழியேற்று அதற்காக முனைவோம்.

இந்தியாவில் முதல் பத்து கலைஞனில் ஒருவனாகவோ, இந்தியாவில் முதல் பத்து ஊடகத்தில் ஒன்றை நமதாக்கவோ, இந்தியாவில் முதல் பத்து வங்கிகளில் ஒன்றை நமது உடைமையாக்கவோ, இந்தியாவில் அதிக வருவாய் உள்ள கோயில் ஒன்றை நமது உடைமையாக்கவோ, இந்தியாவின் அலைக்கற்றை ஒன்றை நமது உடைமையாக்கவோ, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்;றுவராக நம்மில் ஒருவர் இடம் பற்றவோ, முயன்றோமானால் நடுவண் அரசை தேர்வு செய்கிற இடத்திற்கு நாம் முன்மொழியப் படுவோம்.

நாம் கூலித்தளத்தில் இயங்கும் வரை நம்முடைய தமிழ் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகவே இருந்து கொண்டிருக்கும்.

நாம் பொங்க வேண்டியது அரிசிப் பொங்கல் அல்ல; உடைமை கட்டமைப்பிற்கான மனமாற்றப் பொங்கல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,667

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.