Show all

இரட்டைஇலை யாருக்கு என்பது அக்டோபர் 6ல் தேர்தல் ஆணையம் விசாரணையில் தெரியும்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்த பிறகு, அவர்கள் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற முயற்சித்து வருகிறார்கள்.

இந்த அணிகள் இணைந்த பிறகு கடந்த 12 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், சசிகலாவால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அந்தப் பதவியை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் கட்சியை நடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மைத்ரேயன் முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்பதுரை (ராதாபுரம்), ரவி (அரக்கோணம்) ஆகியோர் நேற்று டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து பேசினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர்களில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாங்கள் இரு அணிகளாக முன்பு செயல்பட்ட நேரத்தில் தேர்தல் அணையத்தில் தனித்தனியாக பதிகை செய்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, நாங்கள் தனித்தனியாக பதிகை செய்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.

பொதுக்குழு தீர்மானத்தால் பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒன்றாக இணைந்துவிட்டனர். இதனால் கட்சியின் அ.தி.மு.க. என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் ஒன்றிணைந்த அணிகளுக்கே சொந்தம் ஆகும்.

எனவே, அ.தி.மு.க. என்ற பெயரை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக வருகிற அக்டோபர் 6 அன்று விசாரணை நடத்த இருக்கும் தேர்தல் ஆணையம், இது தொடர்பாக தங்கள் தரப்பிலான ஆவணங்களை வருகிற 29 க்குள் பதிகை செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம், அவரது அணியைச் சேர்ந்த அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.