Show all

திருப்பூரில் ஒரு நடுகல் கண்டுபிடிப்பு! பழந்தமிழர்களால் நடுகல் என்று போற்றிக் கொள்ளப்பட்டது: இன்றைய நமது இலிங்கம்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி, குமரவேல், ரமேஷ்குமார் மற்றும் வேலுச்சாமி ஆகியோர்  பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருப்பூர் அருகே உப்பாறு அணை பகுதியில் கடந்த கிழமை கள ஆய்வில் ஈடுபட்டிருந்த, திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி, குமரவேல், ரமேஷ்குமார் மற்றும் வேலுச்சாமி ஆகியோர்  பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நடுகல் 110 செ.மீ. அகலமும், 85 செ.மீ. உயரம் கொண்டது. இதில், இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் சிற்பங்கள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள வீரன் தன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் உள்ள நீண்ட வாளைத் தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். இடையில் உள்ள வீரன் தன் இரு கைகளிலும் உள்ள ஆயுதத்தை நிலத்தில் ஊன்றியபடி உள்ளார். இடது கோடியில் உள்ள பெண் தன் இடதுகையை இடுப்பில் வைத்தபடி, வலது கையில் பூச்செண்டை உயர்த்திய நிலையிலும் உள்ளார். இந்த பெண்ணுக்கு அருகில் ஒரு குழந்தை தன் தாயை தன் இடது கையில் பிடித்தபடியும், வலது கையை தொங்க விட்ட நிலையிலும் உள்ளது. பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஒரு குடுவையும் உள்ளது. மூவரும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுடன் கூடிய ஆடை அணிந்து, காதில் காது அணிகலன்களும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி வகை அணிகலன்கள் அணிந்துள்ளனர். நடுகல்லின் பின்புறத்தில் ஞாயிறு, நிலா முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளது. தெரிய வருகிறது.

போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பது நமது தமிழ் மரபு. இவ்வழக்கம் பற்றிய செய்திகள் ஆரியர் வருகைக்கு முந்தைய நமது தமிழ் இலக்கியங்களில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. 

கண்ணகிக்குக் கல் எடுத்த நிகழ்வு சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. உயரிய செயல் செய்வார்க்கும் கல் நடப்பட்டதை இது உணர்த்துகிறது. தொல் காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார். காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று தமிழகத்தில் இத்தகைய நடுகற்கள் நிறையக் கிடைக்கின்றன. 

புறப்பொருள் வெண்பா மாலை நடுகல் அமைத்தலைத் துறைகளாகப் பொதுவியல் திணையில் கூறுகிறது. 1.கல்காண்டல், 2.கல்கோள் நிலை, 3.கல் நீர்ப்படுத்தல், 4.கல் நடுதல், 5.கல் முறைப்பழிச்சல், 6.இற்கொண்டு புகுதல் என்பன நடுகல் பற்றிய துறைகள். 

1.கல்காண்டல் என்பது: கல்லைக் காணல் என்பதைக் குறிக்கிறது. வீரனது உருவம் பொறித்து நடுவதற்கேற்ற கல்லைத் தேர்வது என்பது இதன் பொருள். பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது பொருள். 2.கல்கோள் நிலை என்பது: கல்லைக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது. தேர்ந்தெடுத்த நடுகல்லை எடுத்துக் கொணர்தல் என்பது பொருள். நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லைக் கைக்கொண்டார் என்று புறப்பொருள்வெண்பா விளக்கமளிக்கிறது. 
3.கல் நீர்ப்படுத்தல் என்பது: நடுதற்குரிய கல்லை நீரில் இடுதல் என்பதைக் குறிக்கிறது. நீரில் இடப்பட்ட முறையினை புறப்பொருள்வெண்பா விளக்குகிறது. காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் மஞ்சனமாட்டி வாவியில் கல்லை இட்டனர் என்பது வெண்பாவின் கருத்து. 
4.கல் நடுதல் என்பது: உருவாக்கப்பட்ட நடுகல்லை நடுதல் என்பதைக் குறிக்கிறது. வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி அக்கல்லை நடுதல் என்பது பொருள். புறப்பொருள்வெண்பா கல் நடும் முறை பற்றியும் அதற்குச் செய்யப்படும் சிறப்பினையும் புலப்படுத்துகிறது. 
5.கல் முறைப் பழிச்சல் நடுகல்லைப் புகழ்தல் என்பதைக் குறிக்கிறது. ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள். பாணனை விளித்துக் கல்லை வணங்குமாறு கூறுவதாக புறப்பொருள்வெண்பா அமைந்துள்ளது. பாணனே! வீரன், பகைவரைக் கொன்ற வீரத்தினைச் சொல்லிச் சொல்லி, பொறுக்க முடியாத துன்பத்தோடு இருக்கும் சுற்றத்தாரோடு, கொடைத் தன்மை மிக்க இவ்வள்ளலுக்கு எடுக்கப்பட்ட கல்லினை வணங்கிச் செல்வாயாக என்கிறது வெண்பா. 
6.இற்கொண்டு புகுதல் என்பது: கல்லுக்குக் கோயில் எழுப்புதல் என்று பொருள். இதனை, வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல் என்பது இதன் விளக்கம். நடுகல்லைச் சுற்றிக் அழகான மதில்கள், மதிலில் பல்வேறு வரலாற்றுச் சிற்பங்கள் கோபுரங்கள், கோபுரக் கலசம் அமைத்துக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை புறப்பொருள்வெண்பா காட்டுகிறது. 

நடு ஆசியாவிலிருந்து நடோடி இனமாக கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்த ஆரியர்களுக்கு தொடக்க காலத்தில் இது வேடிக்கையாக இருந்தது. நாடோடிகளாக வாழ்க்கை நடத்திய ஆரியர்கள் இறந்தவர்களைத் தண்ணீரில் வீசிச்செல்லும் பழக்கம் உள்ளவர்கள். இறந்த வீரர்களை இந்தளவு போற்றிக் கொள்வதை அவர்களால், செரிமானம் செய்து கொள்ள முடிய வில்லை. அதுமட்டுமல்லாமல், பல்வேறு சிற்பங்களை யெல்லாம் செதுக்கி, அழகான மதில்களையும், கோபுரங்களையும் கோபுரக் கலசங்களையும் அமைத்து கோயிலை வடிவமைக்கும் தமிழர்கள், வழிபாட்டு அடையாளத்தை மட்டும் லிங்கம் மாதிரி ஒருகல்லைக் கோவிலுக்குள் வைத்து வழிபடுகிறார்கள் என்று கிண்டலடித்தார்கள். 

தொடக்கத்தில் கிண்டலடித்தவர்கள் லிங்கம் என்பதே உயரிய வடிவம் என்று கற்பித்து நமது நடுகல்லை லிங்கமாகவே வழிபடத் தொடங்கினார்கள். நம்மவர்களும் அவர்களை வழிபாட்டுக் கடமைகளைச் செய்வதற்குரிய ஆட்களாக பணித்தார்கள். குறிப்பாக நமது மன்னர்கள் மூலமாகவே பணிக்கப் பட்டார்கள். பிறகு லிங்கத்திற்கு அவர்கள் பல்வேறு புனைகதைகளை யெல்லாம் கட்டினார்கள். சிவலிங்கம், இராமலிங்கம், பூதலிங்கம், புஷ்பலிங்கம், விசுவலிங்கம், என்று பெயர் வைத்து தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றி விட்டார்கள். 

நமது தமிழர்களும் லிங்கம் என்பது பிறமொழிச் சொல்லாக இருந்த நிலையில், அதன் பொருள் புரியாமலே தங்களுக்கு அந்தப் பெயர்களையும் கூட பெருமையாகச் சூட்டிக் கொண்டார்கள். ஆனால் ஆரியர்கள் யாரும் லிங்கம் என்ற பெயரைத் தங்களுக்கு ஏன் சூட்டிக் கொள்வதில்லை என்பது ஒரு நெருடல்தான். 

கோயில்களில் உள்ள வழிபாட்டு அடையாளங்களை- நாம் போற்றிக் கொள்ள வேண்டிய நமது முன்னேரின் நடுகல்- என்று நினைந்து வழிபடுவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.