Show all

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால் இந்தியா பாதிக்குமா?

நிலையான பொருளாதாரம், திட்டமிட்ட அரசின் சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டும் இருப்பதால் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்தியா தாங்கும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

 

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகள் இறக்கத்தைக் கண்டன. பிரிட்டன் வெளியேறியிருப்பது பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருத்துகள் நிலவுகின்றன.

 

இதையொட்டி கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நமது பேரியல் பொருளாதார அடிப்படைகள் வசதியான வெளிப்புற தன்மையுடன் மிக வலிமை வாய்ந்தவை. நிதிச் செலவு கட்டுப்பாடு மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவைகளால் இந்தியப் பொருளாதாரம் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதாகவும் ஜேட்லி கூறினார். அதே நேரம் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உட்பட மிகப் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர இருக்கிறோம். இது நமது வளர்ச்சி விகிதத்தை 8-9 சதவீதமாக உயர்த்தும் என்று ஜேட்லி தெரிவித்தார்.

 

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மற்ற பொருளாதாரங்களை விட இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதால் எந்தவொரு வெளிநாட்டு மாற்றமும் இந்தியாவை பாதிக்காது என்று தெரிவித்தார்.

 

பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு இந்தியாவிற்கு திறன் உள்ளது. அதேபோல் நமது பொருளாதாரமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களை நடுவண் அரசு கொண்டு வர இருப்பதால் நிபுணர்களும் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

 

சந்தைகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியச் சந்தை சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று ஹெச்டிஎப்சி வங்கியின் அஷூதோஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.