Show all

தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் படுகொலை

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலையில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

 

தொடர்வண்டி நிலையத்தில் பலரும் பார்க்கும்படி இளம் பெண்ணை கொலை செய்த நபர் எவ்விதத் தடையும் இல்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில்,

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 2-வது நடைமேடையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இன்று (வௌ;ளிக்கிழமை) காலை 6.30 மணியளவில் பணிக்குச் செல்வதற்காக 24அகவையுள்ள ஸ்வாதி என்ற பெண் நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலைய 2-வது நடைமேடையில் காத்திருந்துள்ளார். அப்போது இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது.

ஸ்வாதி சென்னை சூளைமேடு கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற நடுவண் அரசு ஊழியர். ஸ்வாதிக்கு திருமணமாகவில்லை. மறைமலைநகர் மகிந்திர டெக் பார்க்கில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறார். வழக்கமாக இதே நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இருந்துதான் அவர் பணிக்குச் சென்று வந்துள்ளார்.

 

வழக்கம்போல் இன்று தொடர்வண்டிக்காக ஸ்வாதி காத்திருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் வந்து பேசத் தொடங்கியுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் தன் கையில் வைத்திருந்த ஒரு பையில் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளை எடுத்து அப்பெண்ணை தாக்கியுள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் முயன்றுள்ளார். ஆனால் நிலைகுலைந்து அங்கேயே கீழே விழுந்தார்.

 

அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு அந்த இளைஞரை பிடிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக நடைமேடையில் இருந்த கடை வியாபாரிகள் கூறுகின்றனர். முதல்கட்ட விசாரணை அடிப்படையில் கொலையாளி ஸ்வாதிக்கு ஏற்கெனவே அறிமுகமானவராகத் தான் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

 

நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சம்பவம் நடந்த 2-வது நடைமேடையில் சிசிடிவி கேமரா இல்லை. ஸ்வாதி பெண்கள் பயணிக்கும் தொடர்வண்டி பெட்டி நிற்கும் இடத்தில் காத்திருந்தார்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.