Show all

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் மீது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியே ராஜினாமாவுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், உட்கட்சி பூசலும் காரணமாக இருக்கலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளங்கோவன் மீது தொடர்ந்து பல புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றுள்ளது. விஜயதாரணியுடன் நேருக்கு நேர் மோதல், உட்கட்சிப் பூசலை சரி செய்ய முயலாமல், பெரிதாக்கி அரசியல் வட்டாரங்களில் காங்கிரஸ் கட்சியின் பெயரை கிண்டலுக்கு உள்ளாக்கியது முக்கியப் புகார்களாக உள்ளன.

அதே போல, அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர்களை இழிவாகப் பேசியதும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது கருத்துத் தெரிவித்தது குறித்தும் மேலிடத்துக்கு அவ்வப்போது செய்திகள் சென்று கொண்டிருந்தன.

தமிழகச் சட்டப்பேரவையில் சரியாக ஆய்வு நடத்தி, காங்கிரஸ் கட்சிக்கு பலமுள்ள தொகுதிகளைக் கேட்டு பெறாமல், தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் இளங்கோவன் மீது நேரடியாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இந்த நிலையில் தான் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.