Show all

மாநிலங்களுக்கு இடையிலான பசுமை வழித்தடம் அமைக்க மோடியிடம் வேண்டுகோள்

தமிழக உபரி மின்சாரத்தை வாங்க மற்ற மாநிலங்கள் தயாராக உள்ளன. அம்மாநிலங்களுக்கு மின்சாரத்தை வழங்க, பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடத்தை விரைவாக அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தில்,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 600 மெகாவாட் காற்றாலை மின் நிறுவுதிறன் உள்ளது. இது நாட்டின் காற்றாலை மின் நிறுவுதிறனில் 27 விழுக்காடு ஆகும். இது தவிர ஆயிரத்து 142 மெகாவாட் சூரிய மின் சக்திக்கான அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 4 ஆயிரத்து 500 மெகாவாட் காற்றாலை, 5 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்புகளும் நிறுவ வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும்.

காற்றாலை மின்சாரம் என்பது குறிப்பிட்ட காலத்தில் அதாவது, ஜூன் முதல் செபம்டம்பர் வரையில் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும். மரபு சார்ந்த எரிசக்திக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்தும் போது, அதன் உற்பத்தியும், நுகர்வும் சீராக இருக்க வேண்டும். அப்போது தான், அதன் உண்மையான பயன்பாட்டை நாம் அனுபவிக்க முடியும். இதற்கு, அந்த மின்சாரத்தை வெளியில் எடுத்துச் செல்வதற்கான போதுமான கட்டமைப்பு வசதி மிகவும் அவசியம். இதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையிலான பசுமை வழித்தடம் அமைக்க தமிழகம் முடிவெடுத்துள்ளது.

 

இதற்கு தேசிய தூய்மை எரிசக்தி நிதியத்தில் இருந்து நிதியுதவி கோரி, கடந்த 2013-ம் ஆண்டு செம்டம்பர் 16-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய தூய்மை எரிசக்தி நிதியத்தின் உதவி மற்றும் ஜெர்மனியின் கேஎப்டபிள்யூ என்ற அமைப்பின் நிதியுதவியுடன், மாநிலங்களுக்கு இடையிலான பசுமை வழித்தடப்பணிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு, தற்போது முழுமையான இயக்கத்துக்கு தயாராகியுள்ளது.

 

வழக்கமாக ஆண்டுதோறும் காற்றடிக்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம், தென்மேற்கு பருவமழை காலத்தை ஒட்டியே வருகிறது. நடப்பு காற்றடிக்கும் பருவ காலத்தில், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் வெளியேற்றும் கட்டமைப்பின் மூலம் 4 ஆயிரத்து 400 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது மாநிலங்களுக்கிடையிலான மின்சாரம் எடுத்துச் செல்லும் கட்டமைப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், தற்போது காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை தமிழகத்தில் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மின்தேவை உள்ள மாநிலங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கோரிக்கைக்காக, தமிழகம் தற்போது உபரியாக உள்ள ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை விற்கும் நிலையில் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை போதுமானஅளவு கொள்முதல் செய்துவிட்டது. தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைப்படும் பல மாநிலங்கள், தமிழக உபரி மின்சாரத்தை பெற எங்களை அணுகியுள்ளன.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைப்படும் மாநிலங்களுக்கு, தமிழகத்தில் உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை விற்க, மாநிலங்களிடையே பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடம் அவசியமாகிறது. அப்போதுதான் தமிழக உபரி மின்சாரத்தை வெற்றிகரமாக வெளியில் கொண்டு சென்று, தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்க முடியும்.

 

மாநிலங்களுக்கிடையிலான இது போன்ற பசுமை வழித்தடம் ஒன்றை அமைக்கும் திட்டம் மத்திய எரிசக்தி நிறுவனத்திடம் இருப்பதை அறிவேன். எனவே, மின்சாரம் தேவைப்படும் இதர மாநிலங்களுக்கு ஆயிரம் மெகாவாட் அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லும் வகையில், மாநிலங்களுக்கிடையிலான பசுமை வழித்தடத்தை விரைவாக அமைக்க மத்திய எரிசக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இது போன்ற பிரத்யேகமான கட்டமைப்பை உருவாக்க சிறிது காலமாகலாம்.

 

அதே நேரம், தமிழகத்தில் உபரியாக இருக்கும் காற்றாலை மின்சாரத்தை இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பிரத்யேக மின் கடத்தும் அமைப்பை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க மத்திய எரிசக்தி கட்டமைப்பு கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். விரைவாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேணடும். என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.