Show all

திருமண நிதி உதவி 218 பயனாளிகளுக்கு ரூ1.25 கோடி! இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்

இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு. அதில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத் தங்கமும் வழங்குவது என்பதும் ஒன்று.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத் தங்கமும் வழங்கும் திட்டம் சிற்சில மாற்றங்களோடு கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமாகும். நகர்ப் பகுதிகளை விட கிராமப் பகுதிகளில் இந்தத் திட்டத்தை  மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 10 மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த 158 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த 60 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 218 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரம் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தா வழங்கினார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்திற்கு பெயராய் அமைந்த மூவலூர் இராமாமிர்தம் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்பு இருந்த தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.

இவர் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் பிரித்தானிய அட்சியின் சென்னை மாகாணத்தில்- பார்ப்பனியர்களின் சூதினால் தமிழ்மன்னர்களால் முன்னெடுக்கப் பட்டு, தொடர்ந்துவந்த தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். இந்திய விடுதலைக்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் இந்திய விடுதலைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ஈவெரா. காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைக்கு பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். 

இந்திய விடுதலைக்கு பத்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் அமைந்த காங்கிரஸ் ஆட்சியினரின் ஹிந்தி திணிப்பை எதிர்த்தி நடைபெற்ற  போராட்டங்களில் கலந்து கொண்டார். அதற்காக ஆறு கிழமைகள் சிறையிலடைக்கப்பட்டார். 

அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் கருத்துப் பரப்புதல்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. இந்திய விடுதலைக்குப் பின்னர் தேவதாசி முறை ஒழிந்தது. 

கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதற்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,301.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.