Show all

கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனம்.

மூடு டாஸ்மாக்கை மூடு, என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மக்களிடையே கவனம் ஈர்த்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு ஆதரவான பதிவுகளும் கொட்டப்பட்டவண்ணம் உள்ளன.

கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றவியல்கிளை வட்டாரம் தெரிவிக்கின்றது.

கோவன் மீதான நடவடிக்கை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, கோவன் இசையமைத்து பாடி உருவாக்கிய ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ பாடல் உட்பட பல்வேறு பாடல்களையும் வினவு அதன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்தப் பாடல்களில் பெரும்பாலனவை அரசு அமைப்புகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப்பாடலில் ஜெயலலிதா போல் வேடமணிந்த ஒருவர் மதுவைப் பாட்டிலில் இருந்து கோப்பையில் ஊற்றுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மது விழிப்புணர்வு, குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள தனி மனித சுதந்திரம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், அத்தகைய விமர்சனங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. சைபர் கிரைம் அதிகாரிகளில் ஒருவர் இந்தப் பாடலை இணையத்தில் கவனித்தார். அதன் அடிப்படையிலேயே கோவனைத் திருச்சியில் கைது செய்தோம். முதலில் அவர் ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாக நிலைமையை சமாளித்து அவரை கைது செய்தோம் என்றார்.

கைது நடவடிக்கை குறித்து மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.சரவணன் கூறும்போது, கோவன் கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என்றார்.

கோவனின் மகன் சாருவாஹன், என் தந்தையின் கைது மக்கள் கலை, இலக்கிய கழகத்தை மிரட்டும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிரட்டும் செயல். இருப்பினும், மக்கள் கலை, இலக்கிய கழகம் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலுடன், கோவனின் பிரச்சாரப் பாடல்கள் பலவும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.

கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.