Show all

எம்ஜியார் அவர்கள் துணிச்சல் குறித்த ஒரு நிகழ்வு! இன்று எம்ஜியார் நினைவு நாள்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கள்ளக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த வளர்ப்பு மகன் சுரேந்திரனையும், அண்ணன் சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார். அந்த நினைவுகளை சுரேந்திரன் பகிர்கிறார்:

எம்ஜிஆருடன் எம்.எஸ்.ஒய். 2248 பிளேமவுத் காரில் சென்றோம். விழுப்புரம் தாண்டி நள்ளிரவிற்குப்பின் 1.30 மணி அளவில் நடுச்சாலையில் இருள் சூழ்ந்த வேளையில் ஒரு வெள்ளி கூஜா மினுமினுத்தது. காரை ஓட்டுநர் ராமசாமி ஓட்டி வந்தார். கூஜாவை பார்த்த ராமசாமி எம்ஜிஆரிடம் அதை தெரிவித்து அண்ணே காரை நிறுத்தலாமா எனக் கேட்டார். தலையில் மப்ளர் கட்டி தூங்கிக்கொண்டிருந்த எம்ஜிஆர் திடீரென விழித்து ஏதாவது கார் முந்தி சென்றதா? என்றார். ராமசாமி இரண்டு கார்கள் வேகமாக முந்தி சென்றன என்றதும், உடனே எம்ஜிஆர் காரை நிறுத்தச்சொல்லி அவர் இறங்கி விட்டார். அந்தக் கூஜாவை எடுத்துவரச் சொன்னார்.

ராமசாமி அருகில் காரை நிறுத்திவிட்டு கூஜாவை எடுத்து காரில் ஏறும்போது 10 பேர் கொண்டகொள்ளைக் கும்பல் நெற்றி உயர சிலம்ப கம்பை வைத்து சுற்றி வளைத்தனர். 'மரியாதையாக காரில் இருக்கும் பொருள்களை எடுத்து வெளியே வைத்துவிடுங்கள். உங்களை விட்டு விடுகிறோம்' என குரல் கொடுத்தனர். அப்போது எம்ஜிஆர் பொருட்களை வெளியே எடுத்து வைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்றார். அதற்கு கும்பலில் ஒருவன், 'ஒருவரும் உயிருடன் போகமுடியாது' என்று மிரட்டும் தொனியில் கூறினார். இதைக் கேட்டதும் எம்ஜிஆர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அந்த கம்பை எடுங்கள் அண்ணே என ராமசாமியிடம் கேட்டார். ராமசாமி காரில் இருந்த பூண் கட்டிய பிரம்பை எடுத்து எம்ஜிஆரிடம் கொடுத்தார். அதை கம்பீரமாக பிடித்துகொண்டே 'சரி ஒவ்வொருவராக வாரீங்களா அல்லது மொத்தமா வாரீங்களா' என்றார், எம்ஜிஆர் இதை எதிர்பார்க்காத கொள்ளையர்கள் திகைத்துப்போய் நின்றனர்.

திடீரென ஒருவர் தீக்குச்சியை கொளுத்தி எம்ஜிஆரின் முகத்தருகில் காட்ட எம்ஜிஆரை அடையாளம் கண்டுகொண்டனர். உடனே எம்ஜிஆரின் காலில் விழுந்து வாத்தியாரே, எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள் தெரியாமல் செய்துவிட்டோம் என்றனர். எம்ஜிஆர் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு நீங்கள் எல்லாம் என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் வேலையே இல்லை. அதனால் இப்படி நடந்து கொண்டோம் என்றனர். பின்னர் எம்ஜிஆர் ராமசாமியை அழைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து அனுப்புங்கள் என்றார். பணம் கொடுக்கப்பட்டது. இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினார். அவர்கள் எம.ஜிஆரிடம் இனிமேல் தவறே செய்யமாட்டோம் என்று கூறி காரை அனுப்பி வைத்தனர். எங்கள் இருவருக்கும் அப்போதுதான் உயிரே திரும்பியது. இது எம்ஜிஆரின் துணிச்சலுக்கு ஒரு சிறு உதாரணம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.