Show all

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தடை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், இடமாற்றம் செய்து அனுப்பிய கடிதத்துக்கு, நீதிபதி கர்ணன் தடை விதித்து, அது தொடர்பான விளக்கத்தை அவர் தம்மிடம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலிஜியமின் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு அலுவல்களை பட்டியலிட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர் மற்றும் பானுமதி ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.

இந்த விசாரணையின் இறுதியில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்குத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல்கள் ஒதுக்கப்பட வேண்டாம் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியா சாதி வெறி பிடித்த நாடு என குற்றம் சாட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், அதற்காக தான் வெட்கப்படுவதாகவும், தனது பிறப்புரிமையை விட்டுவிட்டு, சாதியில்லாத நாட்டிற்கு சென்றிடத் தயாராக உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் அவர் அப்போது குற்றம் சாட்டினார்.

நீதிபதி சி.எஸ்.கர்ணன், தான் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னைச் சக நீதிபதிகள் இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும், பல்வேறு வகைகளில் தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் அருகே அமர்ந்திருந்த இன்னொரு நீதிபதி அவரது காலணி இவர் மீது படுமாறு அமர்ந்திருந்தார் என்றும்,

குடியரசு நாள் கொண்டாட்டங்களின் போது வேறொரு நீதிபதி, நாற்காலியொன்றில், நீதிபதி கர்ணனின் பெயரெழுதிய அட்டையினைக் கிழித்து காலடியில் போட்டு நசுக்கினார் என்றும், இன்னுமொரு சம்பவத்தில் பின்னாலிருந்த ஒரு நீதிபதி தனது நாற்காலியைப் பிடித்து ஆட்டினார் என்றும்,

நீதிமன்ற விழாக்களில் பங்கு பெற வாய்ப்பு அளிப்பதில்லை என்றும்

தொடர்ந்து பல்வேறு புகார்கள் அந்த பட்டியல்களில் இடம்பெற்று வருகின்றன.

சுதந்திரமாக பல்வேறு முடிவுகளை தான் எடுப்பது பிடிக்காத சிலர் என் மீது வீண் குற்றங்களைச் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்து வந்துள்ளார்.

இதனிடையே நீதிபதி சி.எஸ் கர்ணனை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றிவிடவேண்டுமென வலியுறுத்தி சென்னை தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஆர்.கே.அகர்வால்,

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி சதாசிவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து நீதிபதி அகர்வால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் நீதிபதி சி.எஸ் கர்ணன் மனு செய்திருந்தார்.

இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை கூட நீதிபதி சி.எஸ்.கர்ணன், தாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சக நீதிபதிகள் தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் பல்வேறு வகைகளில் தனக்குத் தொந்தரவு அளிப்பதாகவும் புகார் கூறியும்,

இதில் தனக்கு நீதி கோரியும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் மனுச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.