Show all

சட்டசோதிட வல்லுனர்களால், செவ்வாய் இருக்குமிடம், ராகு தோசம், என்றெல்லாம்விவாதிக்கப் பட்டு வருகின்றன! எழுவர் விடுதலை

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போபர்ஸ் அவதூறு இந்தியாவில் ஆங்கில ஆண்டு 1980 இல் நிகழ்ந்த மிக தலையாய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் சம்பந்தப்பட்டவராக இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ஆங்கில ஆண்டு 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டன. இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும். 

அதன் பிறகு, விடுதலைப் புலிகள் விருப்பமான, 'இந்திய அமைதிப் படை திரும்பப் பெறுதல்' நிறைவேறி, இலங்கையில் அமைதி திரும்பியிருந்த காலத்தில், 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்  பட்டார் ராஜிவ்காந்தி. இந்த அனுதாப அலையில், நடுவண் அரசில் காங்கிரசும், தமிழகத்தில் அதிமுகவும் ஆட்சிகளைப் பெற்றன. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப் படாமலேயே, ஒரு வழியாக சிறை தண்டனை பெற்றனர் 7 தமிழர்கள். 27ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து விட்ட இந்த ஏழு தமிழர்கள் விடுதலைக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் நல்லதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழக அரசின் மீது நமக்கு ஏகப்பட்ட குறைகளும், கோபங்களும் தீர்க்கப் படாமல் ஒருபக்கம் இருந்த போதும், இந்த ஏழு பேர் விடுதலையில் தன்னுடைய கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது. 

ஆனால் சட்டசோதிட வல்லுனர்களால், குருபார்வை உச்சம் பெற்ற போதும், விடுதலை சாத்தியமா? ஆளுநருக்கு தகுதி இருக்கிறதா? என்றெல்லாம், செவ்வாய் இருக்குமிடம், ராகு கேது தோசம் என்றெல்லாம் விவாதிக்கப் பட்டு வருகின்றன. இந்த ஏழுதமிழர்கள் விடுதலை சிறையைப் பூட்டி விட்டு சாவியைத் தொலைத்த கதையாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,908.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.