Show all

ஜெயலலிதாவின் உடல்நல விவரங்களை தெரிவிக்க டிராபிக் ராமசாமி வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட தமிழக தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால், அவர் மேற்கொள்ளவேண்டிய அரசு பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் பூரணகுணமடைந்து மீண்டும் அரசு பணிகளை மேற்கொள்ளும் வரை தற்காலிக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் உடல் நலம் குறித்து அறிக்கைக் கோரிய டிராபிக் ராமசாமி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இது பொதுநல வழக்கு அல்ல என்றும் சுய விளம்பரத்திற்கான வழக்கு என தள்ளுபடி செய்யப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.