Show all

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தன. இதைத் தொடர்ந்து, நடுவண் அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ஜனவரி 12-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நடுவண் அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஆகியவை பதில் மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பான வழக்கு, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற வழக்குகள் விசாரணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தமிழக அரசின் வழக்குரைஞர் எம்.யோகேஷ் கண்ணா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார். சுமார் 500 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 2014-இல் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த பின்பு அதற்கென வளர்க்கப்பட்ட காளைகளின் பராமரிப்பு குறித்தும், அந்தக் காளைகள் விற்கப்படும் நிலைமை உள்ளிட்டவை குறித்தும் ஆவணத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்புடைய வழக்கு விசாரணை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கூடுதல் ஆவணங்களைத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. எனவே, அந்த ஆவணங்களைப் படித்துப் பார்த்து தங்கள் தரப்பு பதிலைத் தெரிவிக்க விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், அடுத்த விசாரணையின் போது அவகாசம் கோரும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.