Show all

வெங்காயத்துக்கான விலை கிலோவுக்கு 5 காசுகளாக நிர்ணயம்; விரக்தியடைந்த விவசாயி

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவர் விளைவித்த வெங்காயத்துக்கான விலை கிலோவுக்கு 5 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அந்த விவசாயி, மொத்த வெங்காயத்தையும் விளைநிலத்தில் கொட்டி அழித்தார். நாசிக் அருகே உள்ள நிப்பாட் வட்டாரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் தராடே. இவர் தனது 10 ஏக்கர் வேளாண் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு கடந்த ஆண்டு இறுதியில் அறுவடை செய்துள்ளார். அதில், 1,000 குவிண்டால் வெங்காயத்தை அவர் இருப்பில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. சந்தையில் அதிக விலை கிடைக்கும்போது அவற்றை விற்க சுதாகர் தராடே திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், 13 குவிண்டால் வெங்காயத்தை விற்க அப்பகுதியில் உள்ள சாய்கேதா வேளாண்பொருள் சந்தையை அவர் அண்மையில் அணுகியுள்ளார். அப்போது குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.5 மட்டுமே தர வர்த்தகர்கள் முன்வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, விரக்தியடைந்த அவர், வெங்காயம் அனைத்தையும் தனது விளைநிலத்தில் கொட்டியுள்ளார். அறுவடைக்காக மட்டும் ஏக்கருக்கு ரூ.780 செலவிட்டுள்ளதாகத் தெரிவித்த சுதாகர், வெங்காயத்தைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வாகன வாடகையாக ரூ.700 கொடுத்ததாகக் கூறினார். ஆனால், தனது விளைபொருளுக்கு மொத்தமாகவே ரூ.65 மட்டுமே சந்தையில் வழங்க முன்வந்தததாக அவர் ஆதங்கம் தெரிவித்தார். இதுகுறித்து விளக்கமளித்த சாய்கேதா சந்தை நிர்வாகி, சுதாகர் கொண்டுவந்த வெங்காயங்கள் அழுகிய நிலையில் தரமற்றதாக இருந்தன என்றும் அதன் காரணமாகவே குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.