Show all

சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்துவதா? குவியும் கண்டனங்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்

இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது தற்போது இந்தியக் கடலோர காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தமிழர் நலனைக் காக்க இயலாத ஒரு பலவீனமான ஆட்சி இருக்கின்றது என்ற துணிச்சலில் இந்த தாக்குதல் நடைபெற்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கடலையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க பாஜக அரசு துடிப்பது வெட்டவெளிச்சமாகிறது என்றும் இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதற்கு வேறு என்ன பொருள்? என்று தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்துவதா? என்ற கேள்விக் கணைகள் வகை வகையாகப் பதிவிடப் பட்டு வருகின்றன.

தமிழக மீனவர்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது இந்திய கடலோர காவற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏற்கதக்கதல்ல. எனவே இந்த சம்பவம் குறித்து அறங்கூற்றுமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.