Show all

அடைமழையால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளும் நிரம்பும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கூறும் போது,

வடகிழக்குபருவ மழையின் தொடக்க நிலையிலேயே 66 ஏரிகள் முழு கொள்ளளவினை எட்டியுள்ளன. ஏராளமான ஏரிகள் நீர்வரத்தின் காரணமாக நிரம்பும் நிலையில் உள்ளன. இன்றும் நாளையும் மழை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎன்றனர்.

மழை பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியதாவது:

மாவட்டத்தில் 84 அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களும், 117 பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களும், 183 மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களும், 131 குறைந்த பாதிப்புக்குள்ளாகும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மழையால் பாதிப்பு ஏற்படும் இடங்களில்மீட்புப் பணிகளுக்காக தீயணைப்பு, மின்வாரியம், காவல் துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் என 11 துறை அலுவலர்கள் கொண்ட 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை ஆகிய துறைகள் முலம் 1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மணல் முட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

மின்வாரியத்தினர், பாம்பு பிடிப்போர், மீனவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.

அவசர காலங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு 044-27237107, 27237207 என்ற எண்களிலும் அழைக்கலாம். மேலும் 94450 51077 மற்றும் 94450 71077 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.