Show all

எப்படி வந்தது தைமுதல் நாள் புத்தாண்டு!

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டுகளில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க  வேண்டும்?

எனவே தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள் தமிழ்தொடர்ஆண்டு-5023ல் (1921) சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி திருவள்ளுவர்  பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 முடிவு செய்தனர். 

பொங்கல் விழாவிற்கு போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் அரசு முன்னமேயே அங்கிகரித்து விடுமுறை அளித்தள்ளதால் அதில் ஒரு நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்தால், அரசு முரண்டு பிடிக்காமல், திருவள்ளுவர் நாளை அங்கிகரிக்க ஏதுவாகும் என்ற அடிப்படையில் தான் அந்தக் கூட்டத்தில் திருவள்ளுவர் நாள் தையில் வைக்கப் பட்டது. 

அந்தக் கூட்டத்தில் திருவள்ளுவரின் காலம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்யப் பட்டதேயொழிய தமிழர்க்கு தொடர் ஆண்டு ஏதாவது இருந்திருக்கக் கூடுமா? தமிழ் ஆண்டு அடிப்படை, சோதிடம் சாதகம் தமிழருடையதா? தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப் படுகிற சுழற்சி ஆண்டுகளுக்கு எப்படி சம்சுகிருத பெயர் அமைந்தன.

இராமயணம் மகாபாரதம் என்னும் இரண்டு நாடோடி இலக்கியத்தை மட்டும் சொந்தமாகக் கொண்டிருக்கிற ஆரியர்களுக்கு, காலக் கணக்கை உருவாக்குவது சாத்தியமா? பல்லாயிரம் ஆண்டுகளாக  ஒரே இடத்தில் வாழ்பவர்களால் தானே தன் தலைக்கு நேராக வருகிற ஒவ்வொரு கோள்கள், ஒவ்வொரு நாள் ஓரைகள், மீண்டும் மீண்டும் வருகிற பருவகாலங்கள் குறித்து எல்லாம் சிந்திக்க முடியும், நாடோடிகளாக வாழ்ந்த ஆரியர்களுக்கு எப்படி வானியல் சாத்தியமாகும். என்றெல்லாம் யோசிக்கவேயில்லை, 

அதுவும் தமிழகத்திற்கு வரும் போதே ஆரியர்கள் வானியல் தெரிந்து வைத்திருப்பது எப்படி சாத்தியம்? என்ற எந்த ஆய்வு நோக்கும் அந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்களுக்கு இருந்திருக்க வில்லை. 

ஆண்டுகள் வடமொழிப் பெயராக இருக்கின்றன. அவற்றைத் தள்ளி விட வேண்டும் என்பது மட்டுமே அன்றைய தமிழ் ஆர்வலர்களின் நோக்கமாக இருந்தது.

எந்த ஆய்வு நோக்கமும் இல்லாமல், தமிழருக்கு ஒரு ஆண்டை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆங்கில ஆண்டையே 31 கூட்டி தமிழர்களுக்கான  ஆண்டாக வள்ளுவர் ஆண்டு ஆக்கிக் கொண்டார்கள் என்பதுதான் வேடிக்கை. 

வாட்டர் பால்ஸ் என்பதை நீர்வீழ்ச்சி என்று மொழிபெயர்ப்பதால், வரலாற்றைத் தொலைக்கிறோம். நீர்வீழ்ச்சி என்று சொல்லும் போதும், அது வாட்டர் பால்ஸ்தான். வாட்டர் பால்ஸ் என்று சொனனவனிடம் இருந்து கற்றுக் கொண்ட உணர்ச்சிதான். 

திருவள்ளுவர் ஆண்டின் நிலையும் அதுதான். ஆரியத்திலிருந்து நம்மை ஐரோப்பியத்திற்கு மடைமாற்றிக் கொள்கிறோம் அவ்வளவுதான். நம் சந்ததியருக்கு நாம் சேர்த்து வைக்கிற பெருமையெல்லாம் எதுவும் இதில் இல்லை.

வாட்டர் பால்ஸா? மலையிலிருந்து விழுகிற நீரா? குற்றாலத்தில் மலையில் இருந்து விழுகிற நீரா? அட அது அருவியாயிற்றே என்பதுதான் தேவை. வாட்டர் பால்ஸ் என்பது அருவி என்று தமிருக்குத் தெரியும் என்கிற போதுதான் நமக்கு வரலாறு இருக்கிறது என்பதைப் புலப்படுத்தும். 

வடமொழியில் இருக்கிற சுழல் ஆண்டு தமிழர் கண்டு பிடிப்புதான். அது முன்பு மரங்களின் பெயரில் அழைக்கப் பட்டு வந்தது. அறுபது ஆண்டுகள் ஒருதலைமுறை; அறுபது தலைமுறை ஒருயுகம். காலக் கணக்கு இல்லாமல் பல யுகங்களைக் கடந்து விட்டோம். இனி அந்தக் குறை வேண்டாம். இனிவரும் ஆண்டுகளை தொடர்கணக்கில் குறிப்பிடுவோம். அதுதான் கலியுக ஆண்டு. கலியுக ஆண்டு இது 5120. என்று நமது நிமித்தகர்கள், வள்ளுவர் பரம்பரையினர் தொடர் ஆண்டுக் கணக்கை பின்பற்றி வருகின்றனர். நாமும் தொடர்ந்து பின்பற்றுவோம். தை முதல்நாள் ஆண்டு தொடக்கம் என்று ஐரோப்பியத்தின் பின்னே பயணிக்க வேண்டாம். ஆரியத்தை மறுப்பது சரியே; அதற்காக ஐரோப்பியத்தை அடியொற்றுவது சரியல்ல. தமிழ் அடிப்படை மீட்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,758.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.