Show all

ஆளுநரின் தூய்மை இந்தியா வருகை! கோவை சிரித்தது

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில், இன்று காலை ஆளுநர் பன்வாரிலார் புரோஹித் திடீரென மோடியின் (சொச்சபாரத்) தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பல இடங்களில் வைக்கப்பட்ட புதிய குப்பைத்தொட்டிகள், இரண்டு மணி நேரத்தில் காணாமல் போனதால், அந்த பகுதி மக்களும் வியாபாரிகளும் எள்ளி நகையாடினர்.

தமிழக ஆளுநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநரைப்போல நேற்று களத்தில் இறங்கினார் . கோவை சென்ற ஆளுநர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஆளுநரின் வருகையையொட்டி, கோவையில் பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. கிட்டத்தட்ட, முதல்வர் மற்றும் பிரதமர் வருகைக்கு செய்யப்படும் ஏற்பாடுகள் போலவே, முன்னேற்பாடுகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில், சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டது. அவர், ஆய்வுசெய்யும் பகுதிகள் நேற்றுமுதல் பளீச் தூய்மையில் பராமரிக்கப்பட்டன.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில், இன்று காலை 7 மணிக்கு ஆளுநர் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். ஆளுநர் தூய்மை செய்த இடத்தில் மட்டும், பெயருக்கு சில குப்பைகள் போடப்பட்டன. மற்ற பகுதிகள், பளிச்சென்றிருந்தது. பேருந்துநிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நஞ்சப்பா சாலை, புதிய மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகளில், புதிதாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், இந்த நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, ஆளுநர் சென்ற சில மணி நேரத்திலேயே, அந்த குப்பைத் தொட்டிகள் மாயமாகின.

பெயரளவுக்கு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள், காலை 9 மணிக்கு அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன. குப்பைத் தொட்டி கிடைத்து விட்டதென மகிழ்ச்சி அடைந்த அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், குப்பைத் தொட்டிகள் காணாமல் போனதைப் பார்த்து சீ! இதெல்லாம் ஒரு பொழப்பு என்று எள்ளி நகையாடினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.