Show all

பகுதி நியாயம் கிடைத்தது பாலா நையாண்டி ஓவிருக்கு! மதுரை உயர்அறங்கூற்று மன்றத்தில்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது தொடர்பான வழக்கில், நையாண்டி ஓவியர் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற பாலா, சென்னை உயர் அறங்கூற்றுமன்றக் மதுரைக் கிளையில் கடந்த நேற்று பதிகை செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கந்துவட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினர் 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (23.10.2017) நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து 07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (24.10.2017) எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன்.

இந்தக் கேலிச்சித்திரம் தொடர்பாக, 14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (31.10.2017) நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 -இன் படி வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (05.11.2017) சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை கைது செய்தார். தற்போது நான் நிபந்தனை பிணையில்; விடுவிக்கப்பட்டுள்ளேன்.

நான் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில், என் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே என் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் நையாண்டி ஓவியர் பாலா கோரியிருந்தார்.

இந்த மனு இன்று அறங்கூற்றுவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நையாண்டி ஓவியர் பாலா மீதான வழக்கு விசாரணையை மேற்கொள்ள நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் அறங்கூற்று மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.