Show all

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கர கலவரம்! 144 தடை

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 2வது நாளான நேற்று 144 தடை உத்தரவை மீறி கல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பலர் மண்டை உடைந்தன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 36 விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடந்தது. முன்னதாக முந்தாநாள் இரவு இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தபோது, மேலூர் பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. அப்போது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டன. ஊர்வலத்தில் வந்தவர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். 20-க்கும் மேற்பட்ட  கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், பணம்வழங்கும் இயந்திர மையம் ஆகியவை அடித்து  நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி கலவர பகுதியாக காட்சி அளித்தது.

தகவலறிந்து நெல்லை சரக மாவட்டக் காவல் அதிகாரி கபில்குமார், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் நேற்று 2வது நாளாகவும் பதற்றம் நிலவியதால் காலை முதலே செங்கோட்டை நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே விநாயகர் சிலைகள், நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டது.  இதையொட்டி சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செங்கோட்டை வந்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் ஷில்பா கூறுகையில், செங்கோட்டை, தென்காசி வட்டங்களில் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்.

இதையடுத்து நேற்று சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக மேலூர் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. பம்பு ஹவுஸ் சாலையில் சிலைகள் நேற்று மாலை 4 மணிக்கு ஊர்வலமாக வந்தபோது 144 தடையை மீறி சிலர் கல்வீசி தாக்கினர். இரு தரப்பினரும் கல் வீசி தாக்கியதில் பலர் மண்டை உடைந்தன. இதனால் அப்பகுதியில் மீண்டும் கலவரம் உருவானது. காவலர் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி விரட்டினர். பம்பு ஹவுஸ் சாலைப்  பகுதியில் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் வாகனம் மீது கல்வீசி தாக்கப்பட்டது, பின்னர் விநாயகர் சிலைகளை ஒவ்வொன்றாக பார்டர் குண்டாற்றில் கரைத்தனர், அப்போது மேலூரில் சுப்பையா என்பவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் மீண்டும் பதற்றம் உருவானது. அப்பகுதி பொது மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஒரு தானியை காவலர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற பக்தியின் பெயரால் வன்முறைகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்களை பொது மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தமிழகத்தில் மதக்கலவரங்கள் செயற்கையானது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,911.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.