Show all

இன்றைய பரபரப்பு சாலை விதிமீறல் அபராதம் பதினாறாயிரம்!

தூத்துக்குடியில் தலைக்கவசம் அணியாத விதிமீறலுக்காக பிடிபட்ட நபர், போதையில் பைக் ஓட்டி வந்தது, உரிமம் இல்லாதது, என்பன உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அறங்கூற்று மன்றத்தில் செலுத்தி வண்டியை மீட்டுச் சென்றது இன்றைய பரபரப்பு சாலை விதிமீறல் அபராதச் செய்தி. 

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடியில் தலைக்கவசம் அணியாத விதிமீறலுக்காக பிடிபட்ட நபருக்கு, போதையில் பைக் ஓட்டி வந்தது, உரிமம் இல்லாதது, என்பன உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது அறங்கூற்றுமன்றம்.

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், மேற்கு வங்காளம், மற்றும் இராஜஸ்தான் தவிர்த்து இந்தியாவின் மிகுதி மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது.

தூத்துக்குடியில் போதையில் வாகனம் ஓட்டி வந்த சண்முகநாதன் என்பவருக்கு புதிய வாகன சட்டப்படி ரூ.16,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது அறங்கூற்றுமன்றம். தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் பைக் ஓட்டி வந்துள்ளார்.

சோதனையில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தூத்துக்குடி 2-வது குற்றவியல் அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தினர். போதையில் பைக் ஓட்டி வந்ததற்கு ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.5,000, தலைக்கவசம் அணியாததற்கு 1,000 ரூபாய் என சண்முகநாதனுக்கு மொத்தம் ரூ.16,000 அபராதம் விதித்து அறங்கூற்றுவர் உத்தரவிட்டார். அவர் அறங்கூற்றுமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தி பறிமுதல் செய்யப்பட்ட தனது பைக்கை மீண்டும் பெற்றுக்கொண்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.