Show all

பெற்றோர்களின் தேடலில் தனியார் பள்ளிகள்! படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பு கிடைக்கும் என்பதான நம்பிக்கை

பெற்றோர்களின் தேடலில் தனியார்ப் பள்ளிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், நாம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில்- படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பை நிர்பந்திக்க நம்மால் முடியும் என்பதான நம்பிக்கை பற்றியே. 

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கள்ளக்குறிச்சி துயரத்தில் பள்ளி பாதுகாப்பு விதிகளில் கடைபிடிக்கப்படாத குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுதும், தனியார் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள சக்தி பதின்ம மேல்நிலை பள்ளியில் படித்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி சிறீமதி, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பள்ளி வளாகம் தீக்கிரையானது. 

இந்த நிலையில், பள்ளிக் கட்டடத்தை, கல்வி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதில், பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி, அடைக்கப்படாமல் திறந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

அதேபோல், பள்ளி வளாகத்தில் தேவையான இடங்களில், கண்காணிப்பு படக்கருவி இல்லாதது, உறைவிட பள்ளிகளுக்கான விதிகளைப் பின்பற்றாமை என, பல குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின்படி, பள்ளி வகுப்பறை கட்டடத்திலேயே, தங்கும் அறைகள் இருக்க கூடாது. ஆனால், கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டடத்திலேயே, விடுதி இருந்ததும் தெரிய வந்தது. இதை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்யத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கண்காணிப்பு படக்கருவிகள் குறித்து, உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் முதன்மை இடங்களில் படக்கருவி பொருத்தப்படாமல் இருந்தும், அதை பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டு விட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் செயல்படும் உறைவிட பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து, அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோர்களின் தேடலில் தனியார்ப் பள்ளிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், நாம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில், படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பை நம்மால் நிர்பந்திக்க முடியும் என்பதான நம்பிக்கை பற்றியே. 

இரண்டாவதான காரணம் ஆங்கிலவழிக் கல்வி மோகம் ஆகும். பத்து அகவைக்கு முன்பு அயல் மொழி கற்பிப்பே அந்தப் பிள்ளைகளின் இயல்பூக்கத்தை வெட்டிச் சாய்க்கும் பிழை நெறியாகும். பட்டப்படிப்பிற்கு முந்தைய பிறமொழி வழிக்கல்வியும் அந்த வகைக்கானதே. 

இந்தத் தனியார்ப் பள்ளிகளில் மூன்று அகவையிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியும், முதல் வகுப்பில் இருந்தே ஹிந்தி மொழியும் பயிற்றுவிக்கபடுகிற சமூகச் சீர்கேடு முன்னெடுக்கப்படுகிறது. 

இந்த வகையில் பெற்றோர் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றுகின்றன அனைத்து தனியார்ப் பள்ளிகளும் பிசிறு இல்லாமல். ஆனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கண்காணிப்பில் அனைத்து தனியார் பள்ளிகளும் பேரளவாக கோட்டை விடுகின்றன. 

பெற்றோர் விரும்பும் தவறான வழியை மிகச்சரியாகப் பின்பற்றும் தனியார் பள்ளிகள், அந்தப் பிள்ளைகளை பாதுகாக்கும் வகையான சமூகக் கடமையில் கோட்டை விட்டுவிட்டு, தனியாளாக கேள்வி எழுப்புவோர் மீது மிரட்டலை முன்னெடுத்து தப்பித்து விடுகின்றனர். 

அதில் (ஆங்கில மோகத்திற்கு) தங்களுக்கு பேரளவாக ஒத்துழைக்கும் தனியார்ப் பள்ளிகளில்- இதில் (பிள்ளைகளை பாதுகாக்கும் வகையான சமூகக் கடமை விலகலில்) சகித்துக் கொண்டு செல்கின்றனர் பெரும்பாலான பெற்றோர். 

ஆனால் இப்படி பெருஞ்சிக்கலில் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி சிக்கும் போது, தன் பங்குக்கு என்று சில பல அடாவடிகளை முன்னெடுத்து மகிழ்கின்றன பெற்றோர் வட்டம். அந்த வகை பெற்றோர் அடாவடிகள் மிகச்சிறப்பாகவே முன்னெடுக்கப்பட்டன கணியாமூர் சக்தி பள்ளியில். 

ஆக மொத்தம் தனியார் பள்ளிகளின் தொடக்கம் முதல் நடப்பு வரை, பள்ளி நிருவாகம் முதல் பெற்றோர் வரை, எதுவுமே நாகரிக சமுதாயத்திற்கான விழுமியங்களாக இல்லவேயில்லை என்பதே நடப்பு உண்மை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,317.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.