Show all

தமிழக அரசுக்கு உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கடும் எச்சரிக்கை

தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவோரை கைது செய்தால், தமிழக ஆட்சியை கலைத்து விட்டு, குடியரசுதலைவர் ஆட்சி கொண்டு வர போராடுவேன் என்று உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார். அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு என்று பதிவை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன். ஒருபுறம், ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவதாக பொதுமக்களை கைது செய்து வருகிறீர்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள். சட்டத்தின் எந்த விதியின் கீழ் இப்படி செயல்படுகிறீர்கள்? இது என்ன ஜனநாயக நாடா அல்லது கொடுங்கோலாட்சியா? இங்கு பேச்சு சுதந்திரம் இல்லையா? மம்தா பானர்ஜி மற்றும் மஹாராஷ்டிர அரசு போல் செயல்படுகிறீர்கள். அல்லது, பாடகர் கோவனை கைது செய்தது போல் இதையும் செய்கிறீர்கள். ஜெயலலிதாவை சந்தோஷப்படுத்துவதற்காக இதை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை நீங்கள் நிறுத்தவில்லையென்றால், சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி, 356 பிரிவின் கீழ், தமிழக அரசை கலைத்து விட்டு, குடியரசுதலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதற்கு நான் குடியரசுதலைவரிடம் முறையிடுவேன். குடியரசுதலைவர் ஆட்சி கொண்டு வந்த பின், சட்டத்தின் முன் உங்களை நிறுத்தி, போர் குற்றம் புரிந்த ஜெர்மன் நாஜிகளுக்கு கிடைத்த தண்டனை போல், உங்களுக்கும் கடுமையான தண்டனையை பெற்றுத் தருவேன் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.