Show all

தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது: சகாயம்

தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிகேஎன் இளைஞர் சங்கம் சார்பில், 2016ல் 2016மரக்கன்று நடும்விழா நடந்தது. இளைஞர் சங்க தலைவர் பிரபு தலைமை வகித்தார். பிகேஎன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மோகன் முன்னிலை வகித்தார். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மரக்கன்று நட்டுவைத்து பேசியதாவது,

2016 மரக்கன்றுகளைத் திருமங்கலம் நகரில் நடும் முயற்சி நல்ல முயற்சி. இதேபோல் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தெடங்கப் பட்டால் நமது தமிழ்மண் பசுமை மண்ணாக மலரும். இளைய சமுதாயமான மாணவச் சமுதாயம் முயற்சித்தால் எளிதில் முடியும். தேசத்தில் பசுமை புரட்சி ஏற்படுத்த முடியும்.

மரங்கள் மூலமாக மண் அரிப்பை தடுக்க முடியும், மழை பொழியும், பசுமை செழிக்கும், பறவைகளுக்குப் புகலிடம் கிடைக்கும். மரம் வளர்ப்பு எதிர்காலத்தில் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்தியாவில் தற்போது 11 விழுக்காடே காடுகள் உள்ளன. நமது தலைமுறைகள் வளர மரங்கள் அவசியம்.  நியூட்டனுக்கு விஞ்ஞானத்தையும், புத்தனுக்கு ஞானத்தையும் தந்தது மரங்கள். மாணவர்கள் மரங்களை வளர்க்க வேண்டும். அதேபோல் தாய்மொழியாம் தமிழையும் வளர்க்க வேண்டும். தற்போது தமிழகத்தில் தமிழை யாருமே வளர்க்கவில்லை.

அரசு பள்ளியில் தமிழ் வழியாக கற்கும் மாணவர்களே வளர்த்து வருகின்றனர். நமது தாய்மொழியான தமிழைத் துரத்திவிட்டு ஆங்கிலத்தை வளர்க்கக்கூடாது. சென்னையில் காதி துறை இயக்குனராக பணியில் இருந்த போது அமைச்சரின் வரவேற்பு நிகழ்ச்சியில் வெல்கம் என ஆங்கிலத்தில் எழுதியவருக்கு மெமோ கொடுத்தேன். ஆங்கில ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள். ஆங்கில மோகத்தில் அடிமையாகாதீர். உங்கள் ஆசிரியர்களே உங்களின் சிறந்த வழிகாட்டி. இவ்வாறு சகாயம் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.