Show all

இரட்டை இலை! பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவின் பெயர், இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இரட்டை இலைக்காகவே இணைக்கப் பட்டன. சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே நேரம் தினகரன் தரப்பும் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தது

ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் இரு தரப்பினரிடையே தொடர்ந்து விசாரணை நடத்தியது. இரு அணிகளின் தரப்பில் தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேசமயம் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் ஆஜராகி வாதாடினார்கள்..

விசாரணையின் முடிவில் அதிமுகவின் பெயர், இரட்டை இலை சின்னம் கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையினை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தினகரன் தரப்புக்கு தொப்பி கவிழ்த்தப் பட்டாலும் தொப்பிச் சின்னத்திலேயே வாகை சூடி, தாங்களே அதிமுக என்று சாதிப்பார்கள் என்று அதிமுக வரலாறு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.