Show all

தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண், மாநில அரசுகளை கண்டித்து

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண், மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தர்மபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணிவண்ணன் அனுமதி கேட்டு தர்மபுரி நகர காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தார். அதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதாக கட்சியினர் தெரிவித்தனர்.

அனுமதி வழங்கப்பட்டதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னேற்பாடுகளை கட்சியினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென்று காவல்துறையினர் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று அ.ம.மு.க. கட்சியினருக்கு கவனஅறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.

கவனஅறிக்கை விவகாரம் குறித்து காவல்துறையில் விசாரித்தபோது, சில அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்றும், வேறு சில அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் குழப்பமான பதிலை கூறினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெறாமல் இருக்க இன்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.