Show all

டெங்கு கொசு பண்ணை தொடர்வண்டி நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் வரை பலியாகி உள்ளனர்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 85 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் அதிரடியாக நேரில் சென்று டெங்கு குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.

குறிப்பாக டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார். இதுவரை மாவட்டத்தில் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 1027 பேருக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் தொடர்வண்டி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது தொடர்வண்டி நிலைய பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்தார். இதுபற்றி தொடர்வண்டி நிலைய அலுவலர்களிடம் விசாரித்தார்.

இதையடுத்து டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான திருவாரூர் தொடர்வண்டி நிலைய நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் தினமும் பயணிகள் வந்து செல்லும் தொடர்வண்டி நிலைய பகுதிகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், கழிவுநீர், குப்பைகள் தேங்காதவாறும் வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.