Show all

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூருக்குப் பயணமா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய உள்ளாரா? என்பது குறித்து தே.மு.தி.க. விளக்கம் அளித்து உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். சமீபத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளார். கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மக்கள் நல கூட்டணியின் 5-ம் கட்ட தேர்தல் கருத்துப்பரப்புதல் இன்று தொடங்க உள்ளது. இந்த கருத்துப்பரப்புதலில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. அதற்கு அவரது உடல்நிலை காரணம் என்று கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து விஜயகாந்த் ஓட்டு சேகரிக்க வேண்டியது உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று சில நாட்கள் சிகிச்சை பெற்று புத்துணர்ச்சியுடன் தமிழகம் திரும்பினார். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், முன்கூட்டியே தனது உடல்நிலையில் விஜயகாந்த் அக்கறை செலுத்த தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில் தேர்தலுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்று விஜயகாந்த் சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. நேற்றிரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானம் ஒன்றிலும் விஜயகாந்த் பெயர் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் நேற்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் முகநூல் மூலம் காட்டுத்தீ போல பரவியது.

 

இந்தத் தகவலை தே.மு.தி.க. திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சை பெற செல்வதாக இன்று (நேற்று) வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு வெளியிட வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.