Show all

முதல்வர் பழனிசாமி, ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கைக்கு ரூ.10கோடி அறிவிப்பு

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குவது. இலக்கண, இலக்கியங்களை தன்னகத்தே கொண்ட ஏற்றமிகு மொழி, தமிழ் மொழி. எவரும் ஏந்தி மகிழும் இனிய மொழி.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஆனால் நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புகள் வேறு மொழிகளுக்கு நிச்சயமாக இருக்காது.

தான் சிதையாமல் மற்ற மொழிகளை வளர்க்கும் தனித்தன்மையும் ஆற்றலும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டுஎனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயர் சிந்தனைக்கேற்ப தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி, முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கோரியதன் தொடர்ச்சியாக, அவர்கள் தமிழ்தொடர்ஆண்டு-5118 (2016) ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வெளியிடப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-இந்த வகையில் தமிழக முதல்வர் தமிழ் மக்களின் வாழ்த்துக் குரியவரே; வாழ்க!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.